நாட்டை நாசம் செய்தவர்களுக்குத் துணை போனவர்களை ஒருபோதும் நாம் இணைக்க மாட்டோம்.-- இ.சந்திரசேகரன் தெரிவிப்பு
நாட்டை நாசம் செய்தவர்களுக்குத் துணை போனவர்களை ஒருபோதும் நாம் இணைத்துக் கொள்ளமாட்டோம் என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.சாவகச்சேரி நகரில் தேசிய மக்கள் சக்தி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டபோது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அவர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எடுக்கும் நடவடிக்கைகளை வெற்றி பெறச் செய்ய வேண்டுமானால் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இருந்தும் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடுபவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.
யாழ்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கப் பல இளைஞர்கள் தயாராக உள்ளனர். எம்மோடு அணி திரண்டு வருகின்றனர்.
தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்க் கட்சிகளுக்கு வயிற்றுக் குடைச்சல் ஏற்பட்டு விட்டது.
அவர்கள் மக்களிடம் இனவாதம் பேசி மக்களை சூடேற்றி வாக்கைப் பெறப் பார்க்கின்றனர்.
இனிமேலும் அவர்களுடைய பேச்சைக் கேட்க மக்கள் தயாராக இல்லை.
76 வருடங்களாக தமிழ் கட்சிகளுக்கு வாக்களித்து தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்கின்றனரா?
மக்களுடைய வாழ்க்கையை மாற்றுகின்ற வேலைத் திட்டம் தமிழ்க் கட்சிகளிடம் கிடையாது.
இனவாதம் ஒன்றே அவர்களின் ஒரே மூலதனம்.
உலகம் எங்கோ போய்விட்டது. ஆனால் நாம் எங்கோ நிற்கிறோம்.
தமிழ் கட்சிகள் பிளவடைந்து நிற்கின்ற போதிலும் தமிழர்களின் மானம் காக்க தமிழருக்கு வாக்களியுங்கள் என்கின்றனர்.
மக்களை தடுமாறச் செய்பவையாகவே தமிழ்க் கட்சிகள் காணப்படுகின்றன.அதேசமயம் முன்னாள் அமைச்சர் ஒருவர் மண் கடத்தல் செய்து, கடலை கொள்ளையடித்து யார் ஆட்சிக்கு வந்தாலும் தான் அமைச்சராகிவிடலாம் என்ற கனவில் உள்ளார்.
முன்னை நாள் அமைச்சர் அவர்களே மன்னித்துக் கொள்ளுங்கள்.
தேசிய மக்கள் சக்தி நாட்டை நாசம் செய்தவர்களுக்கு துணை போனவர்களை ஒருபோதும் இணைத்துக் கொள்ளாது.-என்றார்.