முல்லைத்தீவு கரியல்வயல் , சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்கள் 130 பேருக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு நேற்றையதினம் (25) முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
சுண்டிக்குளம் தேசிய பூங்காவிற்குள் உட்சென்றமை, தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை, காணிகளை வெளியாக்கியமை, பாதைகளை அமைத்தல் மற்றும் பாதைகளை பயன்படுத்தியமை போன்ற காரணங்களை முன்வைத்து குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கானது கடந்த வருடம் டிசம்பர் 07ஆம் திகதி (07.12.2023) அன்றையதினம் இடம்பெற்று 02.05.2024 வழக்கு தவணையிடப்பட்டிருந்தது. அதற்கமைய நேற்றையதினம் வழக்கானது விசாரணைக்காக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கு தொடர்பாக மீள் பரிசீலனை செய்து இவ்வழக்குகள் தொடர்பாக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி இருப்பின் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றத்தினால் வழக்கு தொடுநர் தரப்புக்கு கடந்த தவணையில் அறிவுறுத்தப்பட்டு இந்த வழக்கானது மூன்றாக பிரித்து இம்மாதம் 19 ஆம் திகதி, 25 ஆம் திகதி, 26 ஆம் திகதிகளுக்கும் தவணையிடப்பட்டிருந்தது.
அதற்கமைய கடந்த (19.07.2024) அன்று இடம்பெற்ற வழக்கிற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதிக்கும், நேற்று (25.07.2024) இடம்பெற்ற வழக்கிற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதியும் தவணையிடப்பட்டுள்ளது இதேவேளை இன்றும் (26) ஓர் வழக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.