18 ஆம் திகதி முதல் இம்மாதம் முதலாம் திகதி வரை யாழில் 697.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியது

1 month ago




கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் இம்மாதம் முதலாம் திகதி வரையான காலப் பகுதியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 697. 4 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி    பதிவாகியுள்ளது என்று மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நவம்பர் மாதம் 26 ஆம் திகதி 24 மணி நேரத்தில் 253 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது.

இது ஒரு பாரிய அளவாக காணப்படுகின்றது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 980 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 693 பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

29ஆம் திகதி வரை 82 இடைத்தங்கல் நிலையங்களில் 2,163 குடும்பங்களைச் சேர்ந்த 7417 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

டிசெம்பர் முதலாம் திகதி வரை 26 இடைத்தங்கல் நிலையங்களில் 692 குடும்பங்களைச் சேர்ந்த 2393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை வீழ்ச்சியினுடைய தன்மை அல்லது அளவு குறைவடைந்து காணப்படுகின்றமையால் மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

இருந்த போதிலும் பல இடங்களில் வெள்ள நீரோட்டம் இயல்பான  நிலையில் காணப்படாததால்    வெள்ளப் பாதிப்பு நீடிக்கிறது.

இவ்வாறான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குரிய சமைத்த உணவு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

சில பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்க நிதி ஒதுக்கீட்டின் மூலம் சமைத்த உணவு வழங்கப்படாமையை அவதானிக்க முடிந்தது.

உடனடியாகவே அந்த மக்களுக்குத் தேவையான காலப் பகுதிகளுக்கு சமைத்த உணவை அரச நிதியின் மூலம் வழங்குவதற்கு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.

சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்புக் கேணி என்ற பகுதியிலே நீர் வழிந்து ஓட முடியாமல் 50 குடும்பங்கள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியிருக்கிறார்கள்.

வெள்ளநீர் உடனடியாக வடிந்தோடக் கூடிய சாத்தியப்பாடு இல்லாத காரணத்தால் நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் அந்த நீரை வெளியேற்றுவதற்கான  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதேபோன்று பல்வேறுபட்ட முறைப்பாடுகளும் எங்களுக்கு கிடைத்த வண்ணம் உள்ளன.

வெள்ளம் வடிந்தோட முடியாத நிலை தொடர்ந்து காணப்படுமாயின் அதற்குரிய பொருத்தமான பொறிமுறை மூலம் வெள்ளம் அகற்றப்பட உள்ளது .

தொடர்ச்சியாக எதிர்வரும் காலங்களில் இவ்வாறான வெள்ள நிலவரங்கள் ஏற்படும் பட்சத்தில் நாங்கள் முற்கூட்டியே வடிகால் அமைப்பு முறைகளை சரியான விதத்தில் பேணிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.

இதற்காக அனைத்து              திணைக்களங்களின் ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

எதிர்வரும் காலத்தில் நாங்கள் பிரதேச செயலாளர் ரீதியாக, எந்தெந்த பிரதேசங்களில் வெள்ளம் வடிந்தோட பொருத்தமான முறை இல்லை என்ற தரவுகளைப் பெறவுள்ளோம்.

அதற்குத் தீர்வு வருவதற்கு அனைத்து திணைக்களங்களையும் ஒருங்கிணைத்து, நேரடியாக அந்தப் பகுதிக்குச் சென்று என்னென்ன விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில்,  அதற்குரிய நிதி ஒதுக்கீடுகளை அமைச்சின் மூலம் பெற்று வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகவே அனைத்து                    திணைக்களங்களிடமும் அதற்கான உதவி எங்களால் கோரப்படவுள்ளது என்றார். 

அண்மைய பதிவுகள்