இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜூலை படுகொலைகளின் 41 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கனடாவின் பிரதமர் அறிக்கை
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜூலை படுகொலைகளின் 41 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கனடாவின் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) , அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
3,000 க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றது மற்றும் நாட்டின் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலைக் கோருவதற்கான, கனடாவின் உறுதிப்பாட்டை அவர் இந்த அறிக்கையில் புதுப்பித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில், கனேடிய நாடாளுமன்றம் மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஒரு பிரேரணையை ஏற்றுக்கொண்டது.
இது, உலகெங்கிலும் உள்ள தமிழ்-கனேடியர்கள் மற்றும் தமிழ் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களை நினைவுகூருவதில், கனடாவின் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாகும் என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கறுப்பு ஜூலை கலவரத்தின் போது, கனடாவில் 1,800 தமிழர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வதற்கும் அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் புதிய வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும் சிறப்பு நடவடிக்கைகள் திட்டத்தை கனடா ஸ்தாபித்தது என்றும் கனேடிய பிரதமர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாளில், கறுப்பு ஜூலையின் போது பாதிக்கப்பட்ட மற்றும் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதில் கனேடியர்களுடன் இணைந்து கொள்வதாக கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
“கனேடியர்களாக ஒன்றாக, இந்த சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிப்போம்” “அத்துடன் எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு வெறுப்பு மற்றும் வன்முறை இல்லாத, மிகவும் உள்ளடக்கிய மற்றும் அமைதியான எதிர்காலத்தை உருவாக்க மீண்டும் உறுதியளிப்போம்” என்றும் கனேடிய பிரதமர், கறுப்பு ஜூலை படுகொலைகளின் 41 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.