அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஆவி குறித்த செய்திகள் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் 47ஆவது அதிபராக, டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரது பதவியேற்புக்கான செயல்பாடுகள் வெள்ளை மாளிகையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மீண்டும் வெள்ளை மாளிகையில் ஆவி குறித்த செய்திகள் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கட்டடத்தில், பேய்கள் காணப்படுவதாகவும், இரவுப்பொழுதில் மர்ம சப்தம் எழுவதாகவும் கட்டுக்கதைகள் கூறப்பட்டன.
தற்போது அமெரிக்க அட்தி வெளிவந்துள்ள சூழலில், இந்த கதைகள் சமூக வலைதளங்களில் மீண்டும் சூடுபிடித்துள்ளன.
இதுபற்றி ’வாஷிங்டன் போஸ்ட்’ வெளியிட்டுள்ள கட்டுரையில், 3-வது ஜனாதிபதி தாமஸ் ஜெபர்சன் உட்பட இதற்கு முன்னால், வெள்ளை மாளிகையில் வசித்த பலரும் விநோத அனுபவங்களை எதிர்கொண்டதாக பல விசயங்கள் கூறப்பட்டுள்ளன.
குறிப்பாக, 16-வது அதிபர் ஆபிரகாம் லிங்கனின் ஆவி வெள்ளை மாளிகையில் உலவுகிறது என்று பரவலாக நம்பப்படுகிறது.
இதுபற்றி 1946-ம் ஆண்டு அதிபர் ஹாரி எஸ். ட்ரூமேன், அவருடைய மனைவிக்கு எழுதிய கடிதத்தில், ’குளித்து முடித்தபின்பு ஆடை அணிந்துகொண்டு வெளியே வந்தபோது உன்னுடைய அறையிலும் பிற அறையிலும் யாரும் இல்லை.
இதையடுத்து, கதவைப் பூட்டிவிட்டு படுக்கச் சென்றபோது, திறந்திருந்த உன்னுடைய அறையில் கால் தடங்கள் காணப்பட்டன.
அந்தச் சமயத்தில், வெளியே பார்த்தேன். ஒருவரும் இல்லை. உளவு அதிகாரிகளும் குறிப்பிட்ட அந்த நேரத்தில், காவலாளிகூட அங்கு இல்லை எனறு கூறினர்.
இதனால் இந்த இடத்தில் பேய் உலவுகிறது என தெரிகிறது.
இந்த பேய்கள் என்னை தூக்கிச் செல்வதற்கு முன் நீயும், மார்கியும் திரும்ப வந்து என்னைப் பாதுகாத்தால் நன்றாக இருக்கும்’ என அதில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதம் அவருடைய நூலகம் மற்றும் மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
என்றாலும் இத்தோடு அந்த ஆவி பற்றிய கதை நின்றுவிடவில்லை. தொடர்ந்து யு.எஸ்.ஏ. டுடே பத்திரிகை வெளியிட்ட செய்தியிலும் இதுபற்றி கூறப்பட்டுள்ளது.
சந்தேகமேயின்றி, வெள்ளை மாளிகையில் 16-வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் ஆவியே சுற்றி வருகிறது என அது தெரிவித்துள்ளது.
’1865-ஆம் ஆண்டு அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பின்னர், லிங்கனின் ஆவி, எல்லோ ஓவல் அறை மற்றும் லிங்கனின் படுக்கையறையில் தோன்றியுள்ளது’ என அது தெரிவித்துள்ளது.
அதிபர் கால்வின் கூலிட்ஜின் மனைவி கிரேஸ் கூலிட்ஜ், இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் நெதர்லாந்து ராணி வில்ஹெல்மினா ஆகிய பிரபலங்களுக்கு அந்த ஆவி தெரிந்ததாகவும், இதனால் லிங்கன், வெள்ளை மாளிகையில் அடிக்கடி காணப்படும் ஆவியாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று, வெள்ளை மாளிகையில் வசித்தவர்கள் மற்றும் பணியாளர்கள் பல தருணங்களில், அமெரிக்காவின் 2-வது முதல் பெண்மணியான அபிகெயில் ஆடம்சின் ஆவியை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அவர் துணிகளை காயப் போட வருவார் என்றும் லேவண்டர் வாசம் வரும் என்றும் கிழக்கு அறையில் ஈர ஆடையை பார்த்தோம் என்றும் ஊழியர்கள் பல முறை கூறியுள்ளனர்.
மேலும், அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் மகள்களான ஜென்னா புஷ் ஹேகர் மற்றும் அவருடைய சகோதரி பார்பரா என இருவரும் லிங்கன் அறையில் உள்ள குளிர்காயும் இடத்தில் இருந்து பியானோ வாசிக்கும் இசையை 2 முறை கேட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் மீண்டும் ஆவி பற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.