அம்பாறையில் கனமழை பெய்வதால் வெள்ளத்துடன் முதலைகள்,பாம்புகள் விஷ ஜந்துக்களால் மக்கள் அச்சத்தில்

2 months ago



அம்பாறையில் கனமழை பெய்வதால் வெள்ளத்துடன் முதலைகள்,பாம்புகள்  விஷ ஜந்துக்களால் மக்கள் அச்சத்தில்  உள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.

அத்தோடு, வெள்ளத்துடன் முதலைகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் மக்கள் குடியிருப்புகளுக்குள் நுழைந்து அச்சுறுத்தி வருகின்றன.

அம்பாறை, சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான சொறிக் கல்முனை புட்டியாறு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பெண்ணை முதலை இழுத்துச் சென்றது.

இந்தச் சம்பவம் திங்கள்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

சொறிக் கல்முனையைச் சேர்ந்த 58 வயது ஞானப்பிரகாசம் டூரியநாயகி என்பவரையே முதலை இழுத்துச் சென்றது.

இந்தப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஆறுகளில் நீர் அதிகரித்துள்ளது.

காரைதீவு -மாவடிப்பள்ளி நீர் ஓடையில் வழமையாக முதலைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

இவைகளும் மழை வெள்ளத்துடன் கிட்டங்கி ஆறு உட்பட பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.

இவ்வாறு முதலை நடமாட்டம் உள்ள இடங்கள், அபாயகரமான பிரதேசங்களில் குறித்த பிரதேச சபைகள், சுற்றுச் சூழல் அதிகாரிகள், வன பரிபாலன சபையினர், பொதுமக்களுக்கு தெளிவூட்டும் வகையில் எச்சரிக்கை பலகைகளை காட்சிப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அண்மைய பதிவுகள்