ஐனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள் தான் சந்தேகம் இல்லை ரணில் தெரிவிப்பு

6 months ago

"அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின்படி ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள்தான். அதில் சந்தேகம் ஏதும் இல்லை. அதுதான் எனது உறுதியான - தெளிவான நிலைப்பாடு. எனது அந்த நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் அறிவிப்பு ஒன்றை -அறிக்கை ஒன்றை சட்ட முறையாகத் தயாரித்து மக்களுக்குப் பகிரங்கமாகத் தெரிவிக்கும்படி என் சட்டப் பிரிவை அறிவுறுத்தியுள்ளேன். அந்த அறிக்கை விரைவில் மக்களுக்கு வரும்."

இவ்வாறு நேற்றிரவு தெரிவித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. நேற்று இரவு தமது கொழும்பு கொள்ளுப்பிட்டி,  ஐந்தாவது ஒழுங்க இல்லத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம். பிக்களான எம்.ஏ. சுமந்திரன் - இரா. சாணக்கியனுடன் சுமார் 2 மணி நேரம் அவர் பேச்சு நடத்தினார். அச் சமயமே இந்தத் தகவலை அவர்களிடம் தெரிவித்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை இடைநிறுத்த உத்தரவிடும்படி கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகச் சுட்டிக் காட்டிய சுமந்திரன், அது ஐந்து நீதியரசர்கள் ஆயத்தின் முன்னால் வருகின்றது என்றார்.

"அந்த மனுவுக்கும் எமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஊடகங்கள் வாயிலாக அப்படி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதை அறிந்தேன்" - என்று வெளிப்படையாகப் பேசிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “அது ஏன் ஐந்து நீதியரசர்கள் ஆயத்தின் முன் வருகின்றது? அதற்கு ஏதும் விசேட காரணம் உண்டா?" - என்று சுமந்திரனிடம் திருப்பி வினாவினார் எனவும் அறியவந்தது.

"தெரியவில்லை. அது பிரதம நீதியரசரின் தீர்மானம்” - என்று தெளிவுபடுத்தினார் சுமந்திரன்.

"நாங்கள் கொண்டு வந்த 19 ஆவது திருத்தப்படி ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள்தான். அதுதான் எனது உறுதியான நிலைப்பாடு. அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் தேவையில்லை. ஜனாதிபதியின் ஐந்து வருடப் பதவிக்கால முடிவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் நடக்கும். எனது இந்த நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் அறிக்கையைத் தயாரித்து, என் பெயரில் மக்கள் முன்வைக்குமாறு எனது சட்டப் பிரிவு செயலாளரைப் பணித்துள்ளேன்"- என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதில் அளித்தார்.

அண்மைய பதிவுகள்