பூமியின் உட்பகுதியில் உள்ள விரிசலால் நில அதிர்வு-பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் கற்கைப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்தார்.

5 months ago


பூமியின் உட்பகுதியில் உள்ள விரிசல்களினால் ஏற்படும் சிறு அசைவுகளினால் ஏற்படும் அதிர்வுகளே நில அதிர்வுக்கு  காரணம் என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் கற்கைப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்படும் நில அதிர்வு தொடர்பில் பேராசிரியர் அதுல சேனாரத்னவிடம் ஊடகவியலாளர் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

“இலங்கை வருடத்திற்கு 1 அல்லது 2 மில்லி மீட்டர்கள் என்ற விகிதத்தில் நிலம் மிக மெதுவாக உயர்வடைவதே இதற்கு காரணம். இடத்துக்கு இடம் உயரும் அளவு மாறுபடும்.

ஆனால் நிலத்தடி செயல்பாடு அதிகமாக இருக்கும் பல இடங்கள் உள்ளன, குறிப்பாக பூமியின் மேலோட்டத்தில். அந்த இடங்களை அடையாளம் காண்பது மிகவும் எளிது. அவற்றில் உள்ள கனிம வளங்களின் அடிப்படையில். உண்மையில், இந்த பகுதிகள் கனிம வளங்கள் நிறைந்தவை. எனவே, இந்த நில உயர்வால், இந்த சிறிய அதிர்வுகள் ஏற்படுகின்றன." என்றார்.

இந்த நிலையில் அனுராதபுரத்திற்கும் கந்தளாய் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று (16) மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 5 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேலும் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் திகதி வவுனியா பகுதியில் 2.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.