உங்கள் அதிகாரங்களை பயன்படுத்தி இந்திய மீனவர்களை விடுதலை செய்க! இந்திய எம்.பி. இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம்
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுர குமார திசநாயக்க தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதன் மூலம் புதிய ஆரம்பத்தை ஆரம்பிக்கவேண்டும் என இந்திய பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
நல்லெண்ண மற்றும் நேச சமிக்ஞையாக இலங்கை ஜனாதிபதி கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ள அவர்களின் அனைத்து படகுகளையும் விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர்,
அவ்வாறான நடவடிக்கை இலங் கைக்கு ஒரு புதிய திசையை வழங்கும் அவரது நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை தொகுதியைச் சேர்ந்த 37 மீனவர்களையும் விடுதலை செய்வதன் மூலம் சிறந்த ஆரம்பத்தை வழங்க முடியும் என தெரிவித்துள்ள காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்,
80 மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுடன் தனது கடல் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.
ஆனால் எந்த நாடும் இலங்கையை போல தனது அயல்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொள்வதில்லை கைது செய்வதில்லை, அபராதம் விதிப்பதில்லை என காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தரப்பின் சீற்றம் கொள்ள வைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன.
பிராந்தியத்தின் பொறுமையும் அமைதியும் சோதனை செய்யப் படுகின்றது.
வங்களா விரிகுடா போன்ற பொதுக்கடலில் மீனவர்களை குற்றவாளிகள் போல நடத்த முடியாது என இலங்கை ஜனாதிபதிக்கான கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அது கடந்த காலத்தில் இடம்பெற்றது. தற்போது நீங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின் றீர்கள்.
புதிய ஆரம்பம் குறித்து வாக்களித்துள்ளீர்கள். உங்கள் அதிகாரத்தினை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.