காரைதீவில் இடம்பெற்ற சுவாமி விபுலானந்த அடிகளாரின் 77 ஆவது மகா சமாதி தின நிகழ்வும், பதாதை திரை நீக்க திறப்பு விழாவும் சிறப்பாக இடம்பெற்றது.

5 months ago


உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 77 ஆவது மகா சமாதி தின நிகழ்வும், அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா தின பதாதை திரை நீக்க திறப்பு விழாவும் நேற்று வெள்ளிக்கிழமை காலை அவர் அவதரித்த காரைதீவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.

காரைதீவு விபுலானந்தர் ஞாப கார்த்தப் பணி மன்றத்தினர் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசர ணையோடு இந்த நிகழ்வை ஏற் பாடு செய்திருந்தனர்.

முன்னதாக காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியிலிருந்து சுவாமிகளின் திருவுருவச் சிலை தாங்கிய மாணவர்களின் ஊர்வலம் கண்ணகை அம்மன் ஆலயம் வரை நடைபெற்றது.

கண்ணகை அம்மன் ஆலய முச்சந்தியில் அடிகளாரின் திரு வுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து பின்னர் துறவற நூற் றாண்டு விழா தின பதாதை திரை நீக்க திறப்பு விழாவும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந் தினராக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ. ஜெகராஜன், சிறப்பு விருந்தினராக காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்ரன் உள்ளிட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டு சுபவேளை வைத்தனர்.

சுவாமிகளின் "வெள்ளை நிற மல்லிகையோ.." என்ற பாடல் இசைக்க, விருந்தினர்களால் சுவாமிகளின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டன.

இது சுவாமி பிறந்த காரைதீவு மண்ணில் நிறுவப்படும் துறவற நூற்றாண்டு விழா முதலாவது பதாதையாகும். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ய. அநிருத்தனனின் வழிகாட்டலில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

சிலை திறப்பு விழாவின் பின்னர், அங்கிருந்து விருந்தினர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரமுகர்கள் ஊர்வலமாக சுவாமி விபுலானந்தர் மணிமண்டபத்தை அடைந்ததும், அங்கு பணிமன்றத்தின் தலைவர் சோ. சுரநுதன் தலைமையில் 77 ஆவது ஆண்டு மகா சமாதி தின வைபவம் நடைபெற்றது.

சுவாமி விபுலானந்தர் கற்கை நிலைய மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்புரைகள், பாராட்டுப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகள் என்பனவும் நடைபெற்றன.

நிகழ்வின் ஞாபகார்த்தமாக யாழ்ப்பாணம் இணுவில் முருக ஜீவ அறக்கட்டளை நிறுவனத்தின் ஏற்பாட்டில் பதாதை திறந்து வைக்கப்பட்டதுடன் 100 வெள்ளை மல்லிகை செடிகள் விருந்தினர்களால் நடப்பட்டன.