ஆட்கடத்தலில் ஈடுபட்டனர் என்று குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 5 முதல் 10 வருடங்கள் சிறைத்தண்டனையும் 20 இலட்சம் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படும் வகையில் சட்டம் விரைவில் அறிமுகமாகவுள்ளது.
அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள புதிய குடிவரவு சட்ட மூலத்தின் கீழ் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு உள்ளே அல்லது வெளிநாட்டுக்கு ஆட்களை கடத்துவோருக்கு எதிராகவே இந்தத் தண்டனைகள் அறிமுகமாகவுள்ளன.
நிதி அல்லது பொருள் ஆதாயத்துக்காக நாட்டுக்குள் வெளிநாட்டவர்களை கடத்துவோர் அவர்களை மறைத்து வைக்க தங்குமிடம் வழங்குவோர், ஆட்கடத்தலுக்கு துணை நிற்போருக்கு இந்தத் தண்டனை பொருந்தும். சந்தேகநபர்கள் இழைத்த குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை மற்றும் 10 இலட்சம் ரூபாய் வரை தண்டப்பணம் அறிவிடப்படும்.
இதேபோன்று, நிதி இலாபத்துக்காக இலங்கையர்களை நாட்டை விட்டு கடத்தினாலும் இதே தண்டனை பொருந்தும்.
சிறுவர் தொடர்பாக குற்றம் இழைக்கப்பட்டிருந்தால், குற்றவாளிகளுக்கு 8 முதல் 20 ஆண்டுகள் சிறையும் 20 இலட்சம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்படும்.