தனிக்கட்சி அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சி

7 months ago

தேர்தல் ஆணையத்தின் தனிக்கட்சி அங்கீகாரம் பெறுகிறது' நாம் தமிழர் கட்சி' எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு அடுத்தபடியாக பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் முக்கியமான கட்சிகளாக உள்ளன.

இதில் நாம் தமிழர் கட்சிக்கு பல தொகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி திருச்சி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய 4 தொகுதிகளில் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும், கன்னியாகுமரியில் அ.தி.மு.க. வேட்பாளரையும் பின்னுக்கு தள்ளி 3 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி 4ஆம் இடத்தையே பிடித்துள்ளது. கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இம்முறை மைக் சின்னத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 8 வீத வாக்குகள் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி, 8.19 வீத வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சிகளுக்கு மாநில கட்சி அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையகம் வழங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8 வீத வாக்குகள் தேவை என்ற நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றுள்ளது.

வாக்கு சதவீதம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் இரு கட்சிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையகம் உறுதி செய்யப்பட்ட நாள்கள் முதல் ஒரு மாத காலத்துக்குள் அங்கீகாரத்தை வழங்கும் எனவும் கூறப்படுகிறது.

அண்மைய பதிவுகள்