இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது.-- எம்.பி செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எந்தக் காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது எனவும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
புதிய அரசியல் சாசனத்தில் 13 ஆவது திருத்தச் சட்டம் இல்லாது ஒழிக்கப்படும் என ஜே.வி.பி யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் நோக்கம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மீறுகின்ற ஒரு செயல்பாடாக அமையும்.
ஒரு அரசியல் சாசனம் வருகின்ற போது, தமிழ்த் தரப்பிடமும் ஆலோசனையும் பெற்று அதன் பின்னர் அரசியல் சாசனம் எழுதப்பட வேண்டும்.
எங்களுக்கு இனப்பிரச்சினை இருக்கிறது. அதற்கு தீர்வு தருகின்ற வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது.
அரசியல் சாசனம் எழுதப்படுகின்ற போது தமிழ் தரப்புக்களையும், தமிழ் தரப்புக்களின் ஆலோசனைகளையும் பெறவேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டத்தை அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எந்தக் காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக்கூடாது. அதனை நிறைவேற்ற வேண்டும்.
இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்பது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அழிக்க முடியாத ஒப்பந்தமாக காணப்படுகின்றது.
எனவே புதிய அரசியல் சாசனத்தை எழுதி அதனை இல்லாது ஒழிக்கும் சூழலை தற்போதைய புதிய அரசாங்கம், ஜனாதிபதி அவர்கள் செய்யக் கூடாது.
பெருமளவான மக்கள் அவரை நம்பி வாக்களித்து உள்ளனர். தமிழ் மக்களும் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.
எனவே தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்க்கின்ற வகையிலே புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும்.
அதேபோல் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் 13 ஆவது திருத்தச் சட்டமும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை புதிய அரசாங்கமும் ஜனாதிபதியும் செயல்படுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது - என்றார்.