கொழும்பு- மிரிஹானா தடுப்பு முகாமுக்கு அழைத்துச் சென்ற மியான்மர் அகதிகள் மீண்டும் திருகோணமலைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
கொழும்பு- மிரிஹானாதடுப்பு அழைத்துச் செல்லப்பட்ட, மியான்மர் நாட்டு அகதிகள் 103 பேரும், மீண்டும் திருகோணமலைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த அவர்களை நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, பொலிஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் இரு பஸ்களில் மிரிஹானா தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கொழும்பு நோக்கி, அழைத்துச் செல்லப்பட்டவர்களை, மிரிஹானா தடுப்பு முகாமிலிருந்து பொறுப்பெடுப்பதற்கு, அனுமதி மறுக்கப்பட்டமையினால். இடைநடுவில் வைத்து அவர்கள், மீண்டும் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மிரிஹானா தடுப்பு முகாமில் அவர்களுக்கான போதிய வசதிகள் செய்யப்படவில்லை என்றும், சனி, ஞாயிறு தினங்களாக இருப்பதால், ஏற்பாடுகளை செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை மீட்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான ரொஹிங்கர்கள் குறித்து முடிவெடுக்க அவகாசம் தேவை என்று அரசாங்கம் கூறியுள்ளது.
இதேவேளை கடலில் 15 நாள்களுக்கு மேலாகப் பயணித்து 103 பேருடன் ரொஹிங்ய அகதிகள் படகு கடந்த செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவுக் கடற்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.