திருகோணமலையில் மீன்பிடித்தல் பல்லாயிரம் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்குகிறது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

2 months ago





வரலாற்று ரீதியாக இலங்கையின் மீனவ சமூகத்தின் தாயகமாக சிறந்து விளங்கும் திருகோணமலை நகரத்தில் மீன்பிடித்தல் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, ஒரு வாழ்க்கை முறையாகும்.

பழங்கால பாரம் பரியமாக செய்து வரும் இத்தொழில் மூலம் பல்லாயிரம் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்குகிறது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

இலங்கை மற்றும் இந்தியாவின் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் இந்திய தூதரகத்தால் திருகோணமலையிலுள்ள 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ            சங்கங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலை திருக்கடலூர் மீனவர்கள் வர்த்தக சங்க கட்டடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மீனவர்களுக்கான உபகரணங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தப் பகுதி மக்களுக்கு உணவு, வருமானம் மற்றும் தேவைகளுக்கான நம்பிக்கையை கடல் வழங்கியுள்ளது.

இலங்கைக்கு இந்தியா வழங்கிய பெரிய அபிவிருத்தி ஒத்துழைப்பு உதவிகளின் வரிசையில், இந்த நாட்டின் மீனவ சமூகத்தை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும், மேம்படுத்துவதற்குமான எமது முயற்சி முக்கிய இடத்தில் உள்ளது.

2009 - 2010 ஆண்டு உள்நாட்டு ஆயுத மோதலை அடுத்து உள்நாட்டில் இடம்பெயர்ந்த மீனவர்கள் உள்ளிட்ட மீனவர்களுக்கு கடந்த காலங்களில் மீன்பிடி உபகரணங்களை வழங்கிய பல நிகழ்வுகளும் இதில் அடங்கும்.

இன்று உங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில், கடின உழைப்பாளிகளான திருகோணமலை மீனவர்களுக்கு, அபிவிருத்தி உதவிப் பொதியை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த உதவித் தொகுதியில்,            படகுகளுக்கான வெளியிணைப்பு இயந்திரம், பிடித்த மீன்களை பாதுகாக்க கூடிய உறைவிக்கும் இயந்திரங்கள் மற்றும் உயிர் காப்பு அங்கிகள் ஆகியவை அடங்கும்.

இவை உங்கள் அன்றாட நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகிய இரண்டையும் மேம்படுத்த உதவும் அத்தியாவசியமான கருவிகள். ஆழமான உறைவிப்பான்கள் உங்களால் பிடிக்கப்பட்ட மீன்களை தரம்கெடாது பேணுவதை உறுதி செய்யும்.

அதேவேளையில், உங்கள் வருமானத்தைப் பெருக்குவதற்கும் பங்களிக்கும். கடலில் சிக்கித் தவிக்கும் அல்லது விபத்துகளை சந்திக்கும் மீனவர்களையும் மற்றும் அவர்களது படகுகளை பாதுகாப்பாக மீட்பதற்கு அதிக வலுகொண்ட வெளியிணைப்பு இயந்திரங்கள் மற்றும் உயிர் காப்பு அங்கிகள் முக்கியமான ஆதரவை வழங்கும்.

இந்தியாவும் இலங்கையும் நமது கரையோரங்களை இணைக்கும் வரலாறு, கலாசாரம் மற்றும் இந்தியப் பெருங்கடலில் வேரூன்றிய ஆழமான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன.

கடந்த வாரம். இந்தியா இலங்கை மீன்வளத்துறையின் கூட்டுப் பணிக்குழுவின் 6வது கூட்டம் கொழும்பில் நடைபெற்றது.

இதில் இரு தரப்பினரும் மீனவர்கள் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் விரிவாக ஆய்வு செய்தனர்.

இலங்கையில் மீன்பிடித் தொழிலின் முக்கியத்துவத்தையும், மீனவர்களாகிய நீங்கள். இயற்கையாலும்,              சந்தைப்படுத்துவதில் உள்ள விடயங்களாலும், நவீன உபகரணங்களை அணுகுவதன் மூலமும் எதிர்கொள்ளும் சவால்களையும் இந்தியாவில் உள்ள நாங்கள் புரிந்து கொள்கிறோம்.

இந்த நட்புறவு மற்றும் கூட்டாண்மையின் உணர்வில்தான் இந்தியா இலங்கைக்குத் தேவையான நேரங்களில் தொடர்ந்து துணை நின்றது.

இனியும் நிற்கும். இன்றைய உதவி அந்த திசையில் பயணிப்பதற்கான மற்றொரு படியாகும்.

இந்த முயற்சி பொருளுதவி வழங்குவது மட்டுமல்ல,                   திருகோணமலை மீனவ சமூகத்தின் நிலையான எதிர்கால சமூகங்களை வலுப்படுத்துவதும், அதற்கான முதலீடுகளை செய்வதுமாகும்- என்றார்.



அண்மைய பதிவுகள்