யாழ்.நகர்ப் பாடசாலைகளில் பணம் இருந்தால் பிள்ளைகளைச் சேர்க்கலாம்.
வீட்டு உறுதியைக் காட்டினால் தான் ஆரம்ப பாடசாலையில் பிள்ளையை சேர்க்க முடியுமோ? வங்கியில லோன் எடுக்கிற மாதிரியெல்லோ இருக்குது, இதனால நகர்ப்புறத்து ஆரம்ப பாடசாலையில பிள்ளைகளை சேர்க்கப் போற பெற்றோர் நெஞ்சில கையை வைத்துக் கொண்டு எல்லோ போகினம்.
வெளிப் பிரதேசங்களில் இருக்கிற பிள்ளைகளுக்கு நல்ல மார்க் போடிகினமாம், பாடசாலைக்கு அருகில் இருக்கின்ற பிள்ளைக்கே குறைய மார்க் போடினமாம், என்ன விந்தை ஜயா இது, கேட்டால் இதுதான் நடைமுறையாம்.
அந்த இடத்துக்கு தூர இடத்தில இருந்து எத்தனை பிள்ளைகள் வருது என்று போட்டில போட்ட விபரங்களில பார்க்கலாம், பார்த்துவிட்டு அதிபரிடம் போய் கேட்கக் கூடாது. அதற்கு காரணம் வைச்சிருக்கினம். அந்தக் காரணத்தைக் கேட்டால் சரியாகத்தான் இருக்கும்.
யாழில் ஆரம்ப பாடசாலைக்கு அருகில் இருக்கின்ற பிள்ளை ஒன்றிற்கு ஆரம்ப பாடசாலை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்தப் பெற்றோர் பிள்ளையை சேர்க்க எங்க போவினம்.
நகர்ப்புறத்து ஆரம்ப பாடசாலைகளில் மட்டுமே இந்தப் பிரச்சினை நாளாந்தம் இருக்கின்றது. வெளிப்புறத்து பாடசாலைகளில பிரச்சினை இல்லை.
நகர்ப்புறத்தில இருக்கிற பிள்ளைகள் நகர்ப்புற பாடசாலைகளில் தான் கல்வி கற்க வேண்டும், கிராமப் புற பாடசாலைகளுக்கு செல்ல முடியாது என்று எவரிடம் முறையிட முடியும். கல்வியமைச்சின் சேக்குலரில் ஒரு நடைமுறை. வடமாகாண கல்வித் திணைக்களத்தில ஒரு நடைமுறை.
என்ன நடைமுறையாக இருந்தாலும் எங்கட இடத்தில ஒரு நடைமுறை இருக்க வேண்டும் என்றால், அதனை சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதையும் செய்யாமல் இதையும் செய்யாமல் சுழியோட்டம் ஓடினம்.
இந்த சுழியோட்டம் கல்வியை பாலாக்கப் போகுது என்ற விடயம் வெள்ளையும் சொல்லையுமாகத் திரிகின்றவர்களுக்குத் தெரியாமல் இல்லை.
பாடசாலைக்கு அருகில் வசிக்கும் பிள்ளைகளை அருகில் இருக்கும் பாடசாலையில் சேர்க்க முடியாதா? வீட்டு உறுதி இல்லை என்றால் மார்க்கை குறைக்க முடியுமா? அப்படிப் பார்த்தால் நகர்ப்புறத்தில வசிக்கும் வீட்டு உறுதியில்லாத பிள்ளைகள் நகர்ப்புறத்து பாடசாலைகளில் படிக்க முடியாது போலும்.
கோயில் காணியில் குடியிருந்ததால் இந்தப் பிள்ளையை சேர்க்க முடியாதாம். கோயில் காணியோ, அரச காணியோ, பிள்ளையின் பதிவுகள் எங்க இருக்கிறது என்று பார்த்தால் சேர்க்கலாம் தானே.
போற போக்கைப் பார்த்தால், சொந்தமாக காணி வாங்கி பிள்ளையின்ர பெயரில வீடு கட்டினால் தான் அனுமதி கிடைக்கும் போல, அப்படிப் பார்த்தால் பிள்ளை பிறக்க முதலே காணி வாங்கி வீடு கட்டியிருக்க வேண்டும். இது சாத்தியப்படுமா?
நகர்ப்புற பாடசாலைகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிள்ளைகளை சேர்க்காமல் புறக்கணிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறலாமா? அல்லது பின்தங்கிய என்றால் அந்தப் பிள்ளையை முளையிலேயே கிள்ளி எறிவதா?
கல்வி அதிகாரிகளின் மனநிலையில் மாற்றம் இல்லையெனில் எதனையும் சாதித்துவிட முடியாது. தங்களுக்கு தெரிந்தவர்கள் என்று பார்க்கக் கூடாது. இந்த ஓட்டை தான் ஆரம்ப பாடசாலைகளில பிரச்சினைகளைக் கொண்டு வருது.
ஒரு காலம் நகர்ப்புறப் பாடசாலைகளில் தூரப் பிரதேசங்களில் இருக்கும் பிள்ளைகளுக்கே இடம் இருக்கு, என்று பாடசாலைகளும், கல்வித் திணைக்களமும் அறிக்கை வெளியிட்டாலும் வியப்பதற்கில்லை.
அனுமதி மறுக்கப்பட்ட பிள்ளை தொடர்பில், அவர்களுக்கு தெரிந்த ஒரு ரீச்சர் மேலிடத்துக்கு சென்ற போது, பிள்ளையைப் பற்றி கேட்டறிந்தது குறைவு, சம்பந்தமில்லாத கதையை மட்டுமே, பேசியதாகவும் ரீச்சர் ஒருவர் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைக்கெல்லாம் காரணம் தலையிருக்க வால் ஆடுறது தான். நான் சொல்வது விளங்குதே, கீழே இருக்கும் ஒருவரின் டாட்டணம் தான் சுற்றுதாம். பங்கு போகுது போல.
இன்று பாருங்கோ, கல்வித்துறைக்கு தான் அதிக பிரச்சினை, முடிவு எடுக்க முடியாது கல்வித் திணைக்களம் இருக்குதா? அல்லது இருக்கிற பதவியைப் பயன்படுத்தி தம்மை வளப்படுத்தினால் சரி என்று நினைக்கிறார்களா? கடவுளுக்கு தான் வெளிச்சம்.