இலங்கை காலாவதியான வெடிமருந்தை உக்ரைனுக்கு அனுப்புகிறது - 'ரஷ்யா ருடே' செய்தி வெளியிட்டுள்ளது
இலங்கையிலிருந்து காலாவதியான வெடிமருந்துகள் உக்ரைனுக்கு அனுப்பப்படுவதாக 'ரஷ்யா ருடே' செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், காலாவதியான வெடி மருந்துகள் வர்ணம் பூசப்பட்ட பின் போலந்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து உக்ரைன் போர்க்களத்துக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.
கொஸ்மிக் ரெக்னோலொஜிஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனமே இந்த வர்த்தகத்தில் ஈடுபடுகின்றது.
300 மில்லியன் டொலருக்கு இந்த வெடி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இலங்கையும் ரஷ்யாவும் நீண்டகால நட்பு நாடுகள். குறுகியகால பொருளாதார நலன்களுக்காக நீண்டகால நட்பை முறிக்கும் விடயங்களில் இலங்கை சமரசம் செய்யக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்ததாவது:-
இலங்கையில் மேலதிகமாக உள்ள வெடி மருந்துகளை உக்ரைனுக்கு விற்பனை செய்வதற்கு போலந்து இடைத்தரகர்களைப் பயன்படுத்துகின்றது என வெளியாகியுள்ள தகவல்களை நாம் நிராகரிக்கின்றோம்.
இவ்வாறான தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. ஆதாரங்களும் இல்லை.
காலாவதியான வெடிமருந்துகள் இராணுவத்தின் முகாம்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த வெடிமருந்துகள் பாதுகாப்பு அமைச்சுக்குச் சொந்தமானவை இல்லை. தனியாருக்குச் சொந்தமானவை.
பாதுகாப்பு கரிசனைகள் காரணமாக இவற்றை அகற்றுமாறு அந்த நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.