ரஷ்யப் படையில் இணைக்கப்பட்ட உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

1 day ago



ரஷ்யப் படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும், வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாகவும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ரஷ்யப் படை யில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களின் தாய்மாரும், வென்னப்புவவைச் சேர்ந்த தாயொருவரும், வலிந்து இணைக்கப்பட்டு காயமடைந்துள்ள கணவருக்காக முல்லைத்தீவைச் சேர்ந்த அவரது துணைவியார் ஒருவருமாக ஐவர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் சிவில் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான ஷெரீன் சரூர், சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கம், ராஜ்குமார் ரஜீவ்காந் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஜனாதிபதியின் பொதுமக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் கமகே அவர்களை அங்கு வந்து சந்தித்தார்.

அச்சந்திப்பின்போது ஏலவே டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி கையளிக்கப்பட்ட குறித்த விடயம் சம்பந்தமான கடிதத்துக்கு உரிய பதில்கள் கிடைக்காமையினாலேயே போராட்டத்தில் ஈடுபடவேண்டிய தேவை ஏற்பட்டதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

குறித்த விடயம் வெளிவிவகார அமைச்சுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதோடு அந்த அமைச்சே விடயத்தைக் கையாள்வதாகவும் பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, போராட்டக்காரர்கள் வெளிவிவகார அமைச்சுக்குச் சென்றிருந்ததோடு அமைச்சின் சுற்றுவட்டத்தில் பதாகைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் வருகை தந்து போராட்டக்காரர்களின் கோரிக்கையை கேட்டறிந்ததோடு அவர்களை அமைச்சருடன் சந்திப்பதற்கான ஏற்பாட்டைச் செய்வதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச் சந்திரா போராட்டக்காரர்களை அழைத்து சந்திப்பை நடத்தியதோடு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்