வெடிகுண்டு மிரட்டல் தரையிறக்கப்பட்ட இந்திய விமானத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், எந்த அச்சுறுத்தலும் இல்லை
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய 'விஸ்தாரா' விமானத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஓடுபாதையின் இறுதியில் விசேட இடத்தில் விமானம் நிறுத்தப்பட்டு 96 பயணிகள் மற்றும் பணியாளர்கள் விரைவாக வெளியேற்றப்பட்டனர்.
எவ்வாறாயினும், விமானத்தை விரைவாக சோதனை செய்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி, விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் காணப்படவில்லை என்பதை பின்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்பிறகு, விமான நிலையமும், விமான சேவை நிறுவனமமும் நேற்று (19) மதியம் வௌியிட்ட ஊடக அறிவிப்பில், 'விஸ்தாரா' விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை உறுதி செய்தது.
இந்தியாவின் 'விஸ்தாரா' எயார்லைன்ஸ்க்கு சொந்தமான யு.கே.131 ரக விமானம், இந்தியாவில் இருந்து நேற்று (19) மதியம் 12.25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டது.
குறித்த விமானத்தில் 96 பயணிகளும் 8 பணியாளர்களும் பயணித்துள்ளனர்.
அந்த விமானம் இலங்கைக்கு சென்று கொண்டிருந்த போது, 'விஸ்தாரா' எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமையக அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
இதன்போது, இலங்கைக்கு வரும் விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தல் குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதையடுத்து, கட்டுநாயக்க விமான நிலைய வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, விமான மற்றும் இராணுவ கமாண்டோ பிரிவு, மருத்துவர்கள், தாதியர்கள், அம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசரகால மீட்பு குழுக்கள் தயார்படுத்தப்பட்டன.
விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை பிற்பகல் 3:00 மணிக்கு வந்தடைய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பிற்பகல் 2:51 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான விமானங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் எச்சரிக்கை விடுக்கப்படுவதும், விமானங்கள் திடீரென தரையிறக்கப்படும் செய்திகளும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெளியாகின.
இந்த வார தொடக்கத்தில் இருந்து, இதுபோன்ற எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 50 இந்திய விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன.
அதன்படி சமீபத்தில், இந்தியாவின் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு சென்று கொண்டிருந்த எயார் இந்தியா பயணிகள் விமானம் திடீரென கனடாவில் தரையிறங்கியது.
இதேபோன்று, இந்தியாவின் மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூயோர்க்கிற்கு பறந்து கொண்டிருந்த எயார் இந்தியா விமானம் திடீரென புது டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
ஆனால், விமானங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாக வந்த எச்சரிக்கைகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பான எச்சரிக்கை என்பது பின்னர் தெரியவந்தது.