திருகோணமலையில் இராணுவ பகுதிக்குள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19 ஆவது நினைவு இன்று

8 hours ago



19 வருடங்களிற்கு முன்னர் துயரமான காலையில், நண்பர்கள் சகாக்களால் எஸ்.எஸ்.ஆர் என அழைக்கப்பட்ட சுகிர்தராஜன் மௌனமாக்கப்பட்டார்.

சுடர் ஒளியின் சுயாதீன செய்தியாளராக பணியாற்றிய சுகிர்தராஜன் 2006ம் ஆண்டு ஜனவரி 24ம் திகதி அலுவலகத்திற்கு செல்வதற்காக காத்திருந்தவேளை அவரது வீட்டுக்கு அருகில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது கொலை தனியொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இல்லை,மாறாக இலங்கையில் ஊடக சுதந்திரம் மற்றும் நீதி ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும்.

குற்றம் நிகழ்ந்த பகுதிக்கு அருகில் ஆளுநரின் செயலகம் அமைந்திருந்தது.

எஸ்.எஸ்.ஆரின் பணிகள் துணிச்சல் மற்றும் உண்மை குறித்த உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருந்தது.

2006ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி திருகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்கள் ஈவிரக்கமற்ற விதத்தில் கொல்லப்பட்டதை அம்பலப்படுத்துவதில் எஸ்.எஸ்.ஆர் முக்கிய பங்களிப்பாற்றியிருந்தார்.

மனோகர் ரஜிகர், ஹேமச்சந்திரன் யோகராஜா,லோகிதராஜா ரோகன், தங்கத்துரை சிவானந்தா, சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய ஐந்து மாணவர்கள், தங்கள் 20 வயதிலிருந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கைக்குண்டு வெடிப்பினாலேயே மாணவர்கள் கொல்லப்பட்டனர் என அரசாங்கம் தெரிவித்து பொய் என்பதை எஸ்.எஸ்.ஆர் தனது புகைப்படங்கள் மூலம் அம்பலப்படுத்தினார்.

அவர்கள் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொல்லபட்டதை அவரது படங்கள் அம்பலப்படுத்தின.

சுடர் ஒளியில் 2006 ஜனவரி நான்காம் திகதி வெளியான இந்த படங்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்தன.

மேலும் இந்த படங்கள் அரசாங்கம் தெரிவிப்பதை கேள்விக்குள்ளாக்கின, அரசபடைகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தின.

மேலும் சுகிர்தராஜன் கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையான வைத்தியர் மனோகரனுடன் பிரதே அறைக்கு சென்றார்.

வைத்தியர் மனோகரன் பின்னர் தனது மகன் உட்பட ஏனையவர்களின் கொலைக்கு நீதிகோரும் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

அந்த பிராந்தியத்தில் அரச பாதுகாப்பின் கீழ் இயங்கிய ஈ.பி.டி.பி துணை இராணுவ குழுக்களின் மனித உரிமைகளை எஸ்.எஸ்.ஆர் விபரமாக வெளிப்படுத்தினார்.

அச்சுறுத்தல்கள் அதிகரித்த போதிலும், உண்மையை வெளிக்கொணர்வதில் அவர் தொடர்ந்து ஈடுபட்டார்.

எனினும் அவரது துணிச்சல் அவரை இலக்காக்கியது.

ஜனவரி 24ம் திகதி இரண்டு கொலைகாரர்கள் அவரை மிக அருகில் நெருங்கிவந்து சுட்டனர். அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

அதிகளவு இராணுவ பிரசன்னம் காணப்பட்ட பகுதியிலேயே இந்த கொலை இடம்பெற்றது,

இது இவ்வறான குற்றங்களில் ஈடுபடுவர்களிற்கு தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் காணப்பட்டதை வெளிப்படுத்தியது.

இந்த கொலையின் பின்னர் விசாரணைகள் எவையும் இடம்பெறவில்லை, எவரும் கைதுசெய்யப்படவில்லை, நீதி வழங்கப்படவில்லை, சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

இந்த குற்றச்செயல் இன்னமும் தீர்வு காணப்படாததாக நீதி வழங்கப்படாததாக ,அச்சம் மற்றும் அமைதியில் உறைந்துபோனதாக காணப்படுகின்றது.

இந்த கொலைக்கான சர்வதேச சமூகத்தின் எதிர்வினைகள் வேகமானவையாக ஆனால் பலனற்றவையாக காணப்பட்டன.

எல்லைகள் அற்ற நிருபர்கள் அமைப்பு, பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு போன்றன, இந்த கொலையை கண்டித்ததுடன், இலங்கை அரசாங்கத்தை விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை பொறுப்புக் கூறலிற்கு உள்ளாக்குமாறு கேட்டுக்கொண்டன.

எனினும் 19 வருடங்களான பின்னரும் இந்த சம்பவம் தீர்வு காணப்படாததாக காணப்படுகின்றது.

19 ஆம் ஆண்டு நினைவில் இன்று சுகிர்தராஜன் சுடப்பட்ட இடத்திலேயே ஊடகவியலாளர்களால் நினைவு கூரப்பட்டு, கிழக்கு ஆளுநரிடம் மகஜரும் கையளித்தனர்.