முல்லைத்தீவு கல்வி வலயத்தில் மட்டும் வெளிமாவட்டம் செல்லாத 500 ஆசிரியர்கள் உள்ளனர்
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 20 கிலோ மீற்றர் தூரத்துக்குள் மாறி மாறி தொடர்ச்சியாக சேவையாற்றி வரும் சுமார் 500 ஆசிரியர்களால் யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து அங்கு சேவைக்குச் செல்லும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பல வருடங்களாக இடமாற்றம் இன்றி சென்றுவரும் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் மட்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வழங்கப்பட்ட தகவலின்படி 66 பாடசாலைகளில் 512 ஆசிரியர்கள் முல்லைத்தீவு வலயத்தின் 20 கிலோ மீற்றருக்கு உள்ளேயே மாறி மாறி சேவையில் உள்ளமை தெரியவந்துள்ளது.
இதனால், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி மாவட்ட சேவைக்கு முல்லைத்தீவு செல்லும் ஆசிரியர்கள் சுமார் 150 கிலோ மீற்றர் வரை பிரயாணம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.