யாழ். பொருளாதார மத்திய நிலையம் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும்.-- இயற்கை நண்பர்கள் இயக்கம் ஆளுநரிடம் கோரிக்கை

2 weeks ago



யாழ்.தென்மராட்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை உடனடியாக இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை நண்பர்கள் இயக்கம் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் தமது கோரிக்கையில் தெரிவித்துள்ளவை வருமாறு,

பொருளாதார மத்திய நிலையங்கள் முழுமையாக சந்தைப்படுத்தல் வர்த்தக நோக்கங்களைக் கொண்டவை.

ஆனாலும் அவை மொத்த சில்லறை வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டவை.உற்பத்திப் பிரதேசங்களை மையமாகக் கொண்டவை, சில்லறை வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டவை என்ற வகையில்தான் யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் உள்ளது.

யாழ்ப்பாணம் விவசாயிகள் தமது உற்பத்திகளைத் தகுந்த விலையில் விற்பனை செய்வதற்கும், நுகர்வோர் குறைந்த விலையில் மரக்கறிகள், பழங்களைக் கொள்வனவு செய்வதற்குமான வசதிகளை உருவாக்கும் நோக்கில் 20 வர்த்தக நிலையங்களை உள்ளடக்கி 200 மில்லியன் ரூபா செலவில் தென்மராட்சியின் மட்டுவிலில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் 2022 இல் திறக்கப்பட்டது.

இந்த யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைப்பதன் மூலம் அதிக நன்மை பெறப்போகின்றவர்கள் தமது கடின உழைப்பின் மூலம் விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள்தான்.

குறிப்பாகப் போட்டிகரமான நிலைமையின் மூலம் வினைத்திறன் மிக்க விலைப் பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் சேதனப் பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குபடுத்துகை மற்றும் நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை பேன்ற உணவு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளின் சந்தைப்படுத்தலை இலகுபடுத்த வேண்டுமானால் பொருளாதார மத்திய நிலையம் உடனடியாக இயங்கு நிலைக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

தற்போது நடைமுறையில் உள்ள மொத்தக் காய்கறி கொள்முதலாளர்கள் சர்வாதிகாரப் போக்கோடு செயற்படுகின்றனர் எனவும், 10 வீதம் என்ற தரகுப் பணத்தைப் பெறும் நிலை காணப்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சிலவேளைகளில் பொருள்கள் விற்பனை செய்யப்படவில்லை என விவசாயிகளிடம் பணம் வழங்கப்படாத நிகழ்வுகளும் சம்பவிக்கின்றன என்றும் விவசாயிகள் பெரும் குறைப்படுகின்றனர்.

பகிரங்க கேள்வி கோரலுக்கு உட்படுத்துகின்ற போது விவசாயிகளின் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கும்.

எனவே யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யும் பொருள்களில் உள்ளூர் தேவைகள் போக எஞ்சியவற்றை தென்பகுதி நுகர்வோருக்கு விற்பனை செய்ய முடியும்.

ஏற்றுமதி பொருள்களை நவீன களஞ்சிய வசதிகளுடன் களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யவும், யாழ்ப்பாண நுகர்வோருக்கு தேவையான தென்பகுதி உற்பத்திப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளவும் சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டதாக இந்த நிலையம் உள்ளது.

குறிப்பாக நன்நீர் வசதி, வாகனத் தரிப்பிட வசதி மற்றும் அங்கு சேரும் கழிவுகளை வெளியேற்றக் கூடிய பொறிமுறை என்பவற்றுடன் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்களையும் தடுக்கக் கூடிய செயற்றிட்டம் ஆகியவற்றுடன் இது இயங்கு நிலைக்கு வருவதனை உறுதி செய்யவேண்டும் என்று விவசாயிகளின் சார்பாக வடக்கு மாகாண சபையின் ஆளுநர் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.