முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய முப்படைப் பாதுகாப்பு முற்றாக நீக்கப்படும், பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.-- அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு

3 weeks ago



முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய முப்படைப் பாதுகாப்பு அடுத்த வாரம் முற்றாக நீக்கப்படும் எனவும், பொலிஸ் பாதுகாப்பு மாத்திரமே வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் நேற்று மேலும் தெரிவித்ததாவது:-

“முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக          குழுவொன்று அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல உரிய பாதுகாப்பு மீளாய்வின் பின்னரே பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுசீரமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய பாதுகாப்பை நாம் குறைக்கவில்லை.

அளவுக்கு அதிகமாக      வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உரிய மீளாய்வுகளுக்குப் பிறகு முறையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

எனினும், மக்களால் நிராகரிக்கப்பட்ட வங்குரோத்து  அரசியல்வாதிகள் இது தொடர்பில் தவறான கருத்துகளை சமூகமயப்படுத்தி வருகின்றனர்.

இது மஹிந்த ராஜபக்சவை இலக்கு வைத்த நடவடிக்கை அல்ல.

உரிய நிர்ணயங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நட யவடிக்கையாகும்.

மஹிந்த ராஜபக்சவுக்கு தற்போது கூட 60 பொலிஸார், 228 முப்படையினர் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக கடந்த 11 மாதங்களில் மாத்திரம் ஆயிரத்து 448 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரமே நாம் செயற்படுவோம்.

எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியப் போவதில்லை.

அந்தவகையில் அடுத்த வாரத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள முப்படையினர் மீளப்பெறப்படுவார்கள்.

பொலிஸ் பாதுகாப்பு மாத்திரமே வழங்கப்படும்.

ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை பாதுகாப்பு மீளாய்வு செய்யப்படும்.

முன்னாள் ஜனாதிபதிகளின்      பாதுகாப்பு மட்டுமல்ல முழு நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாகும்" - என்றார்.