முல்லைத்தீவு - தியோகுநகரில் தனியார் நிறுவனத்தின் அடாவடியை எதிர்த்து பொதுமக்கள் போராடியமை தொடர்பான இன்றைய வழக்கு ஒத்திவைப்பு.
முல்லைத்தீவு - தியோகுநகரில் தனியார் நிறுவனத்தின் அடாவடியை எதிர்த்து பொதுமக்கள் போராடியமை தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - தியோகுநகர்ப் பகுதியில் கடந்த 26.05.2024ஆம் திகதி கரைதுறைப்பற்றுப் பிரதேச சபைக்குரிய மக்கள் பயன்பாட்டிலுள்ள வீதியை, தனியார் நிறுவனம் ஒன்று அடாவடியாக வேலியிட்டு தடுத்தமையால், அப்பகுதியைச் சேர்ந்ந பொதுமக்கள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், உள்ளிட்ட சிலர் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அடாவடியாக வீதியை தடுத்து அமைக்கப்பட்ட வேலியையும் அப்புறப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு 20.06.2024 அன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த விவகாரங்களுடன் தொடர்புபட்டுள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், தியோகுநகர் கிராம மக்கள் , குறித்த தனியார் நிறுவன முகாமையாளர் உள்ளிட்டவர்களை சொந்தப் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக இன்றைய தினத்துக்கு 05.09.2024ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டிருந்தது.
அதனையடுத்து இன்றையதினம் (05.09.2024) குறித்த வழக்கானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்டதரணிகள் வாதாடிய நிலையில் வழக்கானது 12.12.2024ற்கு மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது.