உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணை அறிக்கை தொடர்பில் கூறுபவர் குற்றவாளிகளைக் காப்பாற்ற செயற்படுகிறார்.-- ஜனாதிபதி தெரிவிப்பு
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் கூறிக்கொண்டிருக்கும் நபர், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக அவர்களின் ஒப்பந்தத்தின்படி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்கவில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவேண்டும்.
2019ஆம் ஆண்டு தாக்குதலில் அதிகாரத்தை பிடிக்க இனவாதத்தை தூண்டியவர்கள் 5 வருடங்களின் பின்னர் மீண்டும் கோமா நிலையில் இருந்து எழுந்துள்ளனர்.
இப்போது அந்த அறிக்கை. இந்த அறிக்கையை வெளியிடுமாறு கூறுகின்றனர்.
அந்த அறிக்கைகள் இரண்டும் ரணில் விக்கிரமசிங்கவின் அறிக்கையே.
ஒன்று சனல் 4 விவகாரம் தொடர்பானது மற்றையது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதுகாப்பு தரப்பினரால் ஏதேனும் தவறு நடந்துள்ளதா என்று ஆராய்வதற்கான அறிக்கையாகும்.
அவை விசாரணை அறிக்கையல்ல. அந்த அறிக்கைகள் ரணில் விக்கிரம சிங்கவிடம் கையளிக்கப்பட்டவை.
அந்த அறிக்கைகள் நான் பதவிக்கு வந்த பின்னர் சட்டமா அதிபருக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை இரகசிய அறிக்கைகள் அல்ல.
ரணில் விக்கிரமசிங்கவின் சில குழுக்கள் இந்த விசாரணைகளை உண்மை பக்கமின்றி மூடிமறைக்கும் நோக்கத்திலேயே அமைக்கப்பட்டன.
எவ்வாறாயினும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முறையான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கூறினோம்.
அந்த விசாரணைக்கு பயந்து, உண்மைகளை மாற்றியமைக்கவும், வேறு சமூக நிலைப்பாடுகளை உருவாக்கவும் தவறான நோக்கத்துக்காக கோமாவில் இருந்தவர்கள் எழுந்துள்ளனர்.
குறித்த நபரின் நோக்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான குற்றவாளியை கண்டறிவது அல்ல.
உண்மையான குற்றவாளியை மறைப்பதற்காக அவர்களின் கூலி ஒப்பந்தத்தையே செய்கின்றனர்.
இதற்கு நாம் சிக்கமாட்டோம். நியாயமான விசாரணைகளை நடத்தி உண்மைகளை வெளிக் கொண்டு வருவோம்.
எங்களுக்கு எவரையும் காக்க வேண்டியதில்லை.
இந்த விளையாட்டை ரணில் விக்கிரமசிங்கவிடம் காட்டலாம்.
நாங்கள் கவிழ்ந்த வாளியில் சிக்கிக்கொள்வதில்லை.
விசாரணை முறையாக நடக்கும் போது உண்மைகளை மூடி மறைப்பதற்காக சூழ்ச்சியாளர்கள் வெளியில் வந்துள்ளனர்.
இதற்கு நாங்கள் இடமளிக்கப் போவதில்லை என்றார்.