ஐ.எஸ் சுடன் தொடர்புபட்டதாக இலங்கையர் இந்தியாவில் கைது.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் இலங்கையிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்திய பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரால் மேற்படி இலங்கையர்கள் நால்வரும் அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். (ஈராக் - சிரிய இஸ்லாமிக் ஸ்ரேட்) தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும், இந்தியாவில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்தனர் என்றும் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஐ.பி.எல். தொடரின் பிளேஓவ் ஆட்டங்கள் இடம்பெற்றுவரும் அகமதாபாத்தில் பல்லாயிரம் மக்கள் ஒன்று கூடும் இடங்களில் இவர்கள் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், கைதான இலங்கையர்கள் நால்வரின் வதிவிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று இலங்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நால்வரின் தொலைபேசிகள் சோதனைக் குட்படுத்தப்பட்டுள்ளதுடன் பாகிஸ்தானில் உள்ள முகவர்கள் தாக்குதலில் பயன்படுத்தக்கூடிய சில ஆயுதங்களை வழங்க அவர்களுக்கு உறுதியளித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.