வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாக வழிபட வழியை ஏற்படுத்துமாறு எம்.பி து. ரவிகரன் வலியுறுத்து
வவுனியா வடக்கு ஒலுமடு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ் மக்கள் நிம்மதியான முறையில் வழிபடுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தை பதிவு செய்யவும், ஆலயத்துக்கான காணியை வனவளத் திணைக்களத்திடமிருந்து விடுவிக்கவும், ஆலய வளாகத்தில் குழாய்க் கிணறு அமைப்பதற்கான அனுமதியை வழங்கவும், ஆலயத்துக்கான பிரதான வீதியை சீரமைக்கவும், மலை உச்சியிலுள்ள சிவலிங்கத்துக்கு ஏற்கனவே இருந்ததைப் போல சிறிய கூடாரம் அமைக்க அனுமதி அளிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் ரவிக ரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கோ பொதுமக்கள் சென்று வருவதற்கோ எவ்விதத் தடையும் இல்லை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக அங்கு மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அங்கு மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்ற போதும், இந்த ஆலயத்துக்குச் செல்வதற்கான பிரதான வீதி -மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த கால ஆட்சியாளர்கள் அவ்வீதியை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கமானது அவ்வீதியை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்தோடு குறித்த ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளுக்காக சென்ற அடியவர்கள் குடிநீர் இன்றி மிகுந்த இடர்ப்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், தண்ணீர் தாகத்தால் தவித்த அடியவர்களுக்கு நீர் எடுத்துச் செல்லப்பட்ட போது, கோவில் வளாகத்துக்குள் குடிநீரை எடுத்துச்செல்ல முடியாது எனவும் பொலிஸாரால் தடுக்கப்பட்டது.
எனவே, ஆலய வளாகத்தில் குழாய்க்கிணறு அமைப்பதற்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அதேவேளை வெடுக்குநாறிமலை அமைந்துள்ள பகுதி தற்போது வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே, ஆலய வளாகம் வனவளத் திணைக்களத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
அத்தோடு இந்த ஆலயத்தை பதிவுசெய்வதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
ஆக வே, இந்த ஆலயத்தை பதிவு செய்வதற்கு இடையூறாக இருக்கின்ற விடயங்களைக் களைந்து, கூடிய விரைவில் பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்