தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நீதிக்கும் நல்லிணக்கத்துக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.-- தேசிய சமாதான பேரவை ஜனாதிபதிக்கு வலியுறுத்து

1 month ago



மகத்தான தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நீதிக்கும் நல்லிணக்கத்துக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தேசிய சமாதான பேரவை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவிடமும் அவரின் அரசாங்கத்திடமும் வலியுறுத்திக் கேட்டிருக்கிறது.

இது தொடர்பாக அதன் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜெகாள் பெரேரா வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் கூறப்பட்டவை வருமாறு,

பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியை பெற்றதை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திஸ நாயக்கவுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் தேசிய சமாதானப் பேரவை அதன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

இந்த பிரமாண்டமான ஆணை பொருளாதார அபிவிருத்தி, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவதில் ஜனாதிபதி மீதும் அவரது கட்சி மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகள் உட்பட நாட்டின் சகல பிராந்தியங்களையும் தழுவியதாக அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கும் பரந்தளவிலான ஆதரவு தேசிய ஐக்கியத்தை நோக்கிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படியாக அமைகிறது.

ஜனாதிபதியின் தலைமைத்துவம் இன, மத பிளவுகளை இணைத்திருப்பதன் ஓர் அறிகுறியாக இதை தேசிய சமாதான பேரவை கருதுகிறது.

முன்னென்றும் இல்லாத வகையிலான இந்த நல்லெண்ணத்தின் பின்புலத்தில், நாட்டின் நீண்டகால இனநெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு தேசிய சமாதான பேரவை கேட்டுக் கொள்கிறது.

தேசிய மக்கள் சக்தி உண்மையான ஒரு தேசிய நோக்கையும் அணுகு முறையையும் அடைந்திருப்பதாக நாம் நம்புகிறோம்.

இந்த அம்சத்தை நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதன் மூலமாக வலுப்படுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

மக்களுக்கு சொந்தமான நிலங்களை திருப்பிக் கையளிப்பது, அதிகாரங்களை பகிர்வது, பரவலாக்குவது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ நீக்கத்தை செய்வது, காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் சிறையில் அடைக்கப்பவர்களினதும் விவகா ரங்களை கையாளுவது என்று பல்வேறு பிரச்சினைகள் இதில் அடங்கியிருக்கின்றன.

நாட்டின் வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தில் அரசாங்கம் பிரவேசிக்கும் நிலையில், பொருளாதார சவால்களைக் கையாள்வதுடன் சகல குடிமக்களுக்குமான நீதியையும் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் அடைவதில் அரசாங்கம் வெற்றிபெற வேண்டும் என்று தேசிய சமாதான பேரவை விரும்புகிறது.

நிலைபேறான ஓர் அரசியல் தீர்வுக்கு சிவில் சமூகத்தின் பங்கேற்பும் சகல சமூகங்களினதும் இணக்கமும் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

பரந்தளவு ஆதரவுடனான அத்தகைய ஒரு தீர்வு நிலைபேறான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் வரவிருக்கும் சந்ததிகளுக்கு உறுதிசெய்யும்.