சீமானை கைது செய்யக் கோரி மதுரையில் உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர் கைது.

4 months ago



நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யக் கோரி, மதுரை காந்தி மியூசியத்தில் தனி ஆளாக உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை காந்தி மியூசியம் சிறந்த சுற்றுலாத் தலமாகவும், காந்தியவாதிகள் வந்து செல்லும் புனித இடமாகவும் திகழ்கிறது. பாடசாலை மாணவர்கள் காந்தியைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அதிகளவு மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளிமாநில சுற்றுலாப் பயணிகள், தமிழகத்தின் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கு வந்து செல்கிறார்கள். அரசியல் கட்சி நிகழ்ச்சிகளை நடத்த இங்கு அனுமதி கிடையாது.

இந்த நிலையில், நேற்று காந்தி மியூசிய வளாகத்தில் முன்அறிவிப்பு இல்லாமல் காந்தி சிலை முன்பு திடீரென்று மதுரை வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான ஆர்.கனக வேல் என்பவர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

அப்போது அவர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யக் கோரி கோஷமிட்டார். அவரது திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தால் காந்தி மியூசிய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அவரை வேடிக்கை பார்க்க, சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அங்கு திரண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த காந்தி மியூசிய நிர்வாகிகள், இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த தல்லாகுளம் பொலிஸார் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் ஆர்.கனகவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த வழக்கறிஞர் ஆர்.கனகவேல்,

“சீமான், சமீப காலமாக அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களையும், பொலிஸாரையும், அரசு அதிகாரிகளையும் தரம் தாழ்ந்து விமர்ச்சித்து வருகிறார். சமீபத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை விமர்சித்துப் பாடிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருனை கைது செய்த போது, "அதே பாடலை நான் பாடுகிறேன், தைரியம் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள்" என்று பொலிஸாரை ஏளனம் செய்தார்.

ஓர் அரசியல் கட்சித் தலைவர் இப்படி நடந்து கொள்ளலாமா? பொலிஸ் அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவதால் கடந்த 3 நாள்களாக இன்னும் தரம் தாழ்ந்து எல்லோ ரையும் விமர்சிக்க தொடங்கி உள்ளார். ஆகவே அவரை கைது செய்ய வேண்டும்." என்றார்.

அண்மைய பதிவுகள்