தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு கோரி ராகுல் காந்தி அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்.
இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் ராகுல் காந்தி இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இந்தியாவின் டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதியிடம் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தவும் அவர் கோரியுள்ளார்.
அத்துடன், மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், குறித்த மீன்பிடி படகுகளை மீட்க இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை இரத்து செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இலங்கை சிறைகளில் 141 தமிழக மீனவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக இந்திய அமைச்சர் கீர்த்திவரதன் சிங் தெரிவித்துள்ளார்.
இதில் 96 பேர் தண்டனை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழ்நாட்டு மீனவர்களின் 198 படகுகளையும் இலங்கை அரசாங்கம் கைப்பற்றியுள்ளதாக இந்திய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.