தேர்தலில் மக்கள் என்னை நிராகரித்தால் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்ல மாட்டேன்.-- எம். ஏ. சுமந்திரன் தெரிவிப்பு
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் என்னை நிராகரித்தால் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு செல்லவே மாட்டேன் என்று கூறியுள்ளார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம். ஏ. சுமந்திரன்.
ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து வேட்பாளர் நியமனம் கிடைக்கவில்லை என்பதனால் வேறு கட்சிகளிலும் சுயேச்சைகளிலும் போட்டியிடுபவர்களாலேயே தமிழ் அரசு மீது அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இதேநேரம், அநுராகுமார திஸநாயக்காவின் கட்சியை பொறுத்தமட்டில் ஊழலற்ற ஆட்சி, நேர்மையான நிர்வாகம் தொடர்பில் தமிழர்களிடம் ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பு இருக்கலாம்.
ஆனால், தமிழர்களின் சுயாட்சி கோரிக்கையில் அவர்களுக்கு முழுமையான ஈடுபாடு கிடையாது.
நாட்டில் எல்லோரும் சமமாக பேணப்பட்டால் - நாட்டில் பொருளாதார பிரச்சினை தீர்ந்தால் - எல்லாப் பிரச்சினைகளும் தீரும் என அவர்கள் எண்ணுகின்றார்கள்.
தமிழர்கள் தனியான ஒரு மக்கள் குழாம், அவர்கள் தனியான தேசம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
அவர்களிடம் பிற நல்ல விடயங்கள் இருக்கலாம். ஆனால், எங்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகள் தொடர்பில் இணங்காதவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள்.
ஆகவே தான் பாராளுமன்றத் தேர்தலில் எமக்கு வாக்களியுங்கள் எனக் கோருகின்றோம்." - என்றார்.