யாழ்.கொழும்புத்துறை விபுலானந்தர் வீதி வாய்க்கால் புனரமைப்பை தடுக்கும் இரு வீட்டுக்காரர் -- மாநகர சபை மெளனம்

வடமாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னர் வீதிகள் புனரமைப்பு வேகமாக இடம்பெற்றன. தெற்கில் இருந்து வடக்குக்கு வந்து செல்வதற்காக A9 வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டது. ஆனால் மக்களுக்கான அபிவிருத்தியை இன்றும் ஈட்டமுடியவில்லை என்பது கண்ணால் காணக்கூடியதாக இருக்கிறது.
யாழ்.மாவட்டத்தில் புனரமைப்பு செய்வதற்கு நிறைய வீதிகள் இருக்கின்ற போது புனரமைப்பு செய்கின்ற வீதிகள் கூட சீராக புனரமைக்கப்படுவதில்லை என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வீதி புனரமைப்பின் பின்னர் வீடுகளில் வெள்ளம் தேங்கி நிற்கின்றன.
யாழ்.வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைமை காரியாலய கட்டிட முன்பக்கம் அழகாக புனரமைக்கப்பட்டது. அதாவது வலி.கிழக்கு பிரதேசத்தில் அழகாக காட்சியளிக்கும் கட்டிடம் ஆகும்.
அந்தப் பிரதேசத்தில் விவசாயிகள் பயன்படுத்தும் வீதிகளையும் புனரமைப்பார்களா என்று மக்கள் கேட்கின்றனர்.
இந்த பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட சில வீதிகள் மக்களுக்கு ஏற்ற விதத்தில் புனரமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. கட்டைப்பிராயில் ஒரு வீதி, கோப்பாயில் சில வீதிகள் புனரமைக்கும் போது கவனத்தில் கொள்ளப்படவில்லை.
வீதி புனரமைப்புக்கு தொழில் நுட்ப உத்தியோகத்தரின் பங்கு முக்கியமானது. யாழில் கட்டிடங்களுக்கு அனுமதி கொடுக்கிறார்களோ இல்லையோ, வீதி வெள்ள வாய்க்கால் தொடர்பில் கவனம் செலுத்தாமல் விட்டதனால் தான் வெள்ளம் ஓடமுடியாமல் சில இடங்களில் வீதி தெரியாமல் வெள்ளம் தேங்கி நிற்கின்றன.
இதனால் தான் என்னவோ பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் யாழில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரியைப் பார்த்து வேர்க்குதோ என்று நக்கல் செய்துள்ளார். யாழில் வெள்ளம் வெள்ளம் என்று ஒவ்வொரு மழைக்கும் கத்துவதைத் தவிர மக்களுக்கும் வேறு வழி தெரியவில்லை.
யாழ்.நகரப் பகுதியில் தமிழுக்கு பெரும் தொண்டாற்றிய யாழ்.கொழும்புத்துறை விபுலானந்தர் வீதியில் வசிக்கும் சில குடும்பங்கள் மழை காலங்களில் வெள்ளத்தில் மூழ்குவதாக சொல்கிறார்கள். சம்பந்தப்பட்ட திணைக்களங்களிடம் முறையிட்டும் இன்றும் தீர்வில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர்.
அந்த விபுலானந்தர் வீதியில் 35 குடும்பங்கள் வசிக்கிறார்கள்.7 குடும்பங்கள் மட்டும் ஒவ்வொரு மழைக்கும் வெள்ளத்தில் மிதக்கிறார்கள். இந்தக் குடும்பத்துக்கு வழியைக் காட்ட முடியாமல் யாழ்.மாநகர சபையும் இருக்கின்றது.
யாழ்.மாநகர சபையால் இந்த வீதிக்கு வெள்ள வாய்க்காலை கட்டுவதற்காக 92 இலட்சம் ரூபாயை ஒதுக்கி பல வருடங்கள் கடந்து விட்டன. இன்றும் இலுபறி நிலையில் உள்ளன. இங்கே வாய்க்கால் வெட்டிய போது இரு குடும்பங்களின் எதிர்ப்பால் மூடிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
வெள்ளத்தில் மிதக்கும் 7 குடும்பங்களும் வாழ வேண்டும் என்று அதே வீதியில் இருக்கின்றவர்கள் நினைக்காததால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இப்படித் தான் யாழ்.நகர் கட்டிடங்கள் வெள்ள வாய்க்காலை மூடி கட்டினத்துக்கு கண்டும் காணாமல் இருந்தது வேண்டப்பட்டவர்களோ.
எந்த விதத்தில் வேண்டப்பட்டவர்கள். அனுமதி எடுக்காமல் வாய்க்காலின் மேல் கட்டிடம் கட்டினத்துக்கு இவர்களும் விட்டார்களா? பார்த்துக் கொள்வோம் என்று அனுமதி எடுக்காமல் கட்டிடம் கட்டினவைக்கு பதில் வந்ததாம்.
வடமாகாண அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்படும் போது உரிய வகையில் செலவு செய்யாமல் மீண்டும் மத்திக்கு ஏன் அனுப்புகிறீர்கள்? என்று அதிகாரிகளைப் பார்த்து யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி கேட்கும் போது பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் மெளனம் காத்தனர்.
யாழ்.தீவுப் பிரதேச 200 கிலோ மீற்றர் வீதி புனரமைப்புக்கு இவ்வளவு நிதி தேவை என கேட்ட
அதிகாரியிடம் வடமாகாணத்து வீதி புனரமைக்க எவ்வளவு பணம் தேவை என்று கேட்டு ஜனாதிபதி பேச்சை இடைநிறுத்தினார். ஆளுநர் மெளனம் காத்தார். ஜனாதிபதியும் அதிகாரிகள் மீது பந்தை எறிந்துவிட்டு தப்பித்துக் கொண்டார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை விடயதானங்கள் தொடர்பில் நிதி வேண்டும் எனக் கோரிக்கை முன் வைத்த நிலையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு கேள்வியை முன்வைத்திருந்தார்.
மத்திய அரசால் வடக்கு மாகாண அபிவிருத்திக்காகப் பல்வேறு நிதி மூலங்கள் ஊடாக நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் ஒதுக்கப்படும் நிதிகள் பலவும் செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்படும் நிலை காணப்படுகிறது.
வீதி புனரமைப்புக்காக மக்கள் போக்குவரத்து செய்யும் வீதிகளின் அருகில் பெரிய கற்களைப் போட்டு உடைப்பதால் அந்த வீதியூடாக செல்லும் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.
யாழில் பல வீதிகள் புனரமைப்பு இன்றி காணப்படுகின்றன. புனரமைப்பு செய்கின்ற வீதிகளை ஆவது வெள்ளம் தேங்கி நிற்காமல் ஓடும் அளவிற்கு வீதிகளை புனரமைப்பு செய்யுமாறு மக்கள் கேட்டு நிற்கின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
