அரச சேவை பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை, உற்பத்தியை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தும். -- அரசு தெரிவிப்பு
பொது சேவையில், பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை எனவும் மாறாக உற்பத்தியை மேம்படுத்துவதில், அரசாங்கம் கவனம் செலுத்தும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
அரச வருமானத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கையாக அரச சேவையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
பணி நீக்கம் என்பது, வேலை வாய்ப்பில் இன்னொரு நெருக்கடியை ஏற்படுத்துமே தவிர, அதனால் தீர்வு எதுவும் ஏற்படாது எனவும் குறித்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், எதிர்காலத்தில் அரச சேவையில் ஆட்சேர்ப்பு செய்யும் போது உற்பத்தித்திறன் கவனிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் வெவ்வேறு அரசாங்கங்களின் கீழ் உற்பத்தித்திறன் அம்சத்தில் கவனம் செலுத்தாமல் தற்காலிக முறையில் பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ஆட் சேர்ப்பு செய்தன.
அது, எதிர்காலத்தில் சரி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, எதிர்வரும் காலங்களில் இலங்கையால் பாரிய அரச துறையை உள்வாங்க முடியாது எனவும், விரைவில் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆரம்பிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஒருவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்காக, நாட்டின் தற்போதைய 1.3 மில்லியன் ஊழியர்களின் எண்ணிக்கையில் இருந்து 750,000 ஊழியர்களாக அதன் பொதுத்துறை பணியாளர்களை குறைக்க வேண்டும் என்றும் சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகர் துமிந்த ஹூலங்கமுவ கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.