மனித உரிமையைப் பாதுகாக்க உள்ளக பொறிமுறை ஊடாக இலங்கை முன்னெடுப்பு.-- அமெரிக்கா பாராட்டியது.

1 month ago




மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உள்ளக பொறிமுறை ஊடாக இலங்கையால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை அமெரிக்கா பாராட்டியுள்ளது.

எனவே, உள்ளக பொறிமுறை ஊடாகவே உரிய நடவடிக்கைகள் இடம்பெறும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு-

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கடந்த கூட்டத் தொடரின்போது முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை நாம் ஏற்கவில்லை.

புதிய அரசாங்கமானது தேசிய பொறிமுறை ஊடாக மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என தெரியப்படுத்தி இருந்தோம்.

இதனை நாம் செயலில்            உறுதிப்படுத்தி வருகின்றோம்.

எவ்வித வன்முறைச் சம்பவங்களும் இன்றி ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எமது அணுகுமுறையை வரவேற்றுள்ளன.

அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் என்னுடன் தொலைபேசி மூலம் சுமார் 15 நிமிடங்கள் பேச்சு நடத்தினார்.

மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு  முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் சாதகமான பிரதிபலிப்பை வெளிப்படுத்தினார்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, அடுத்த  கட்டம் நோக்கிச் செல்வதற்கு உள்ளக பொறிமுறை ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என எமது தரப்பில் அறிவித்தோம்.

அது தொடர்பில் தற்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

வடக்கு மக்கள் எமக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

ஒரு நாட்டில் இலங்கையர்களாக முன்னோக்கி செல்வதற்கு அவர்கள் தயாராக உள்ளனர்.

இனவாதம் மற்றும் மதவாதத்துக்கு இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதியும் அறிவித்துள்ளார்- என்றார்.