பொலிஸாரின் அதிகாரப்பசி தமிழர்களின் வாழ்வை பறிக்கிறது - பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவிப்பு

பொலிஸாரின் அராஜகமும் அடக்க முடியாத அதிகாரப்பசியும் தமிழ் மக்களின் வாழ்வியலை பறித்தெடுக்கின்றது. இந்த நாட்டில் நீதி மரணித்து விட்டது.

சட்டம் சாகடிக்கப்பட்டுவிட்டது. இலங்கையின் சட்டத்தினால் தமிழர்களுக்கு ஒருபோதுமே நீதி கிடைக்காது என இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று(22) புதன்கிழமை எதிர்க்கட்சியினால் பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

இந்த அரசு சட்டங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்துகின்றதா அல்லது சட்டங்களின் வரையறைகளை பின்பற்றுகின்றதா என்று இந்த உயர்ந்த சபையில் கேள்வி எழுப்புகின்றேன்.

நீதித்துறை சட்டங்களின் ஊடாக கொண்டுவரப்பட்ட பல்வேறு விடயங்கள் அந்த நீதித்துறை ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படாமல் போகின்றது.

கடந்த மே 17,18 ஆம் திகதிகளில் இலங்கையின் பல பாகங்களில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில், இந்த நாடு ஒரு சட்டத்திற்குள் தான் இருக்கின்றதா என்பதையும் இங்கு கேட்க விரும்புகின்றேன்.

முள்ளிவாய்க்காலில் மக்கள் கொல்லப்பட்ட 15 ஆம் ஆண்டு நிறைவில் அந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுபடுத்தி வடக்கு, கிழக்கு தெற்கு மக்கள் கூட இந்தக்கஞ்சியை எல்லா இடங்களிலும் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இவ்வாறு செய்கின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் உள்ள சம்பூரில் கஞ்சி காய்ச்சியதற்காக இரவில் வீடு புகுந்து பெண்களை பொலிஸார் அடாவடியாக கதறக்கதற கைது செய்து இழுத்து சென்றனர்.

இவ்வாறு கைது செய்வது எந்த நாட்டு சட்டத்திற்குள் உள்ளது.? இலங்கை சட்டத்தில் இவ்வாறு உள்ளதா அல்லது இன்னொரு நாட்டு சட்டத்தை இலங்கை பின்பற்றுகின்றதா?

அதேபோல் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தமது பல்கலைக்கழக வாயிலில் கஞ்சி காய்ச்சி வழங்கினார்கள்.

அவர்களின் கஞ்சிப்பானையை பொலிஸார் தூக்கிச் சென்று வீதியில் வீசினார்கள். அடுப்பை சப்பாத்துக்கால்களினால் உதைக்கின்றார்கள்.

இது இந்த நாட்டுப் பொலிஸாரின் அடாவடித் தனம். யாழ்.பல்கலைக்கழக மாண வர்களும் மிகப்பெரும் தடைகளுக்கு மத்தியில் அந்த தினத்தை அனுஷ்டித்தனர். வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் அனுஷ்டித்திருந்தனர்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம், முள்ளிவாய்க்காலுக்கு வந்து நினைவுத் தூபியில் தனது வணக்கத்தை செலுத்தினார்.

அந்தத் தினத்தில் கூட மோசமான அரச பயங்கரவாதம், பொலிஸின் பயங்கரவாதம் பல்வேறுபட்ட இடங்களில் அரங்கேறியது.

இந்த நாட்டின் சட்டம் எந்த வரையறைக்குள் இருக்கின்றது? இலங்கை பல தடவைகள் சட்டத்தை சாகடித்துள்ளது.

இலங்கையானது,சட்டத்தின் படி நடந்ததாக வரலாற்றில் நாங்கள் படிக்கவில்லை. தமிழர்களுக்கு எதிராகவே சட்டங்கள் பாயும்.

நீதிமன்றங்கள் கூட சுயாதீனமாக செயற்பட முடியாது. இதனால் தான் முல்லைத்தீவு நீதிபதி கூட நாட்டை விட்டு வெளியேற வேண்டியேற்பட்டது. தன்னால் சுதந்திரமான முறையில் இந்த நாட்டில் நீதி வழங்க முடியாது என்பதற்காகத்தான் அவர் நாட்டிலிருந்து வெளியேறினர்.

சட்டத்தினால் நீதி கிடைக்குமென்றால் பிந்துனுவெள சிறைப்படுகொலைக்கு ஏன் இதுவரை நீதி கிடைக்கவில்லை?

வெலிக்கடை சிறைப்படுகொலைக்கும் நீதி கிடைக்கவில்லை. இந்த நாட்டில் நீதி மரணித்துவிட்டது.சட்டம் சாகடிக்கப்பட்டுவிட்டது.

இந்த நாட்டில் தமிழ் சிங்கள மொழிகளுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரச சுற்றறிக்கை வரும்போது தனிச் சிங்களத்தில் வருகின்றது.

இப்போது கூட ஜனாதிபதியினால் பிரதேச சபைகள், நகர சபைகள், மாநகர சபைகளுக்கு உறுப்பினர்கள் சிலரை நியமிக்கலாம் என ஒரு சுற்றறிக்கை திருட்டுத்தனமாக ஜனாதிபதி செயலகத்தினால் சிங்கள மொழியில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் 85 வீதம் தமிழ் பேசும் மக்கள் உள்ள இடத்தில் சிங்கள மொழி பேசுபவரை நியமிக்கின்றீர்கள்.

வடக்கு செயலாளராக சுகாதாரப் பணிப்பாளராக சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரம் மாகாணத்தின் அதிகாரமாக இருக்கும்போது நியமனங்களை மத்திய அரசே வழங்குகின்றது.

சாதாரண கிராமிய வைத்தியசாலைக்கு கூட வைத்தியரை மாகாண சபையால் நியமிக்க முடியாது. கல்வித் துறையிலும் இதே நிலைதான்.

இந்த நாட்டில் சட்டம் நித்திரை கொள்கின்றது. சட்டம் ஆட்சியாளர்களின் தேவைக்கே பயன்படுத்தப்படுகின்றது.

நீதியான முறையில் அது கைக்கொள்ளப்படவில்லை.

மிருசுவிலில் நடந்தது படுகொலை. இது விசாரணை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட இராணுவத்துக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதியாக கோத்தபாய பதவியேற்றவுடன் அவருக்கு பொது மன்னிப்புக் கொடுத்தார்.

இந்த நாட்டின் சட்டம் எப்படியிருக்கின்றது? படுகொலைகள் செய்த குற்றவாளி தண்டிக்கப்படவில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் பொலிஸார் வாளால் ஒருவரை வெட்டுகின்றார். அந்த வீடியோவும் என்னிடம் உள்ளது தேவையானால் சபைக்கு காட்டுகின்றேன்.

யாழ்ப்பாணத்தில் வேலியே பயிரை மேய்ந்து கொண்டிருக்கின்றது. இதுதான் பொலிஸ் அராஜகம்.

பொலிஸாரின் அராஜகமும் அடக்க முடியாத அதிகாரப் பசியும் இங்குள்ள மக்களின் வாழ்வியலை பறித்தெடுக்கின்றது என்றார்.

அண்மைய பதிவுகள்