மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக் கழகத்தின் பதில் துணைவேந்தராகக் கலாநிதி த.பிரபாகரன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கத்தின் பதவிக் காலம் நேற்று 21 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், துணைவேந்தரின் கடமைகளை ஆற்றுவதற்கு பதில் பிரதித் துணைவேந்தர் கலாநிதி தம்பிராஜா பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைவேந்தர் பதவிக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்களை மதிப்பீடு செய்த பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் கடந்த வருடம் ஒக்ரோபர் 15 ஆம் திகதி புள்ளிகளை வழங்கினர்.
அவற்றின் அடிப்படையில், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் முதல் நிலையிலும், சுகநல விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன், விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களையும் பெற்றிருந்தனர்.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் படி, புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விவரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.
பல்கலைக் கழகச் சட்டத்தின்படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் துணைவேந்தராக ஜனாதிபதி தெரிவு செய்து, நியமனம் செய்வது வழமையாக இருந்து வந்தது.
எனினும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகா பதவிக்கு வந்த பின்னர், ஜனாதிபதியால் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை.
துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவுற்ற பல்கலைக் கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே பதில் துணைவேந்தர்களை நியமித்துள்ளது.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் திருமதி ஜீ.ஏ.எஸ். ஹினிகதரவின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் நிறைவடைந்துள்ள நிலையில், கலாநிதி ஜானக புஸ்பகுமார பதில் துணைவேந்தராகக் கடமையாற்றி வருகிறார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஏ.ரமீஸின் பதவிக் காலம் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் கலாநிதி ஜானக புஸ்பகுமார பதில் துணைவேந்தராகக் கடமையாற்றி வருகிறார்.
ருஹூண பல்கலைக்கழகத்தில் இயல்புநிலை பாதிப்புக்குள்ளாகியதை அடுத்து, பல்கலைக்கழகச் சட்டத்தின்படி கல்வி அமைச்சருக்குள்ள தத்துவத்தின் அடிப்படையில், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவின் பதவி வெறிதாக்கப்பட்டு அவரது கடமைகளை ஆற்றுவதற்கெனத் தகுதி வாய்ந்த அதிகாரியாக ஆர்.எம்.யூ.எஸ். கே.ரத்நாயக்க பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது, கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பதில் துணைவேந்தராகக் கலாநிதி தம்பிராஜா பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்துடன். இலங்கையில் பதில் துணை வேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
இதேநேரம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டிருந்த தகைசார் பேராசிரியர் சி.பத்மநாதனின் பதவிக் காலமும் நிறைவடைந்துள்ள நிலையில் யாழ்.பல்கலைக்கழக வேந்தர் நியமனம் குறித்தும் ஜனாதிபதி செயலகத்தால் எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
இலங்கையிலுள்ள அரச பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பில் இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை மாற்றுவது குறித்து அரச உயர்மட்டத்தில் ஆராயப்படுவதனாலயே இந்த இழுபறி நிலை காணப்படுகிறது என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.