இத்தனை அவசரமாக அவர் உலகை விட்டுச்செல்வார் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
எனினும் எழுதப்பட்ட மரணம், எழுதப்பட்டவாறு எழுதப்பட்ட நேரம், எழுதப்பட்ட இடத்தில் நிகழும் என்பதே இறை நம்பிக்கை.
63 வயதாகும் இப்ராஹீம் ரைஸ் சாதாரணமானவரல்ல. கடுமையான உறுதிப்பாடுகொண்ட மார்க்க அறிஞராகவும், நாட்டின் சிரேஷ்ட்ட சட்டவல்லுனராகவும் திகழ்ந்து ஈரான் நாட்டின் அதிபராக உயர்ந்தவர்.
அமெரிக்கா, சீனா, கொரியா, ரஸ்யா போன்ற தலைவர்கள் எங்கேனும் பயணிக்க முன்னர் எவ்வாறு திட்டமிடுவார்களோ அதேபோன்ற முற்பாதுகாப்பு மற்றும் காலநிலை சூழ்நிலைகளை ஆராய்ந்தறிந்தே செல்வது வழக்கம்.
குறித்த ஒரு இடத்திற்கு செல்வதாயின் ஒரு மாதத்திற்கு முன்னரே அந்தப் பகுதியின் பாதுகாப்பு இரகசியாமாக ஆராயப்படும், சிவில் படை செல்லும்.
ஈரான் ஜனாதிபதியின் ஒவ்வொரு பயணத்தின் முன்னரும் குறித்த பகுதியின் களநிலவரம், காலநிலை போன்றவை ஆராய்ந்து அறிக்கை சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பு பிரிவால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பயணம் ஆரம்பிக்கும்.
ஈரானின் நிதியுதவியில் அஸர்பைஜான் நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட நீர்வழங்கல் திட்டமொன்றை திறந்து வைப்பதற்கே கடந்த 19.05.2024 அவர் சென்றிருந்தார்.
திறப்பு விழா அனைத்தும் முடிந்து, தெஹ்ரான் நோக்கி திரும்பி கொண்டிருக்கும் ஒரு சில கணப்பொழுதுகளில் அஸர்பைஜான் எல்லைப்பகுதியில் இந்த திடீர் அனர்த்தம் இடம்பெற்றது.
காலையில் மிக தெளிவாக காணப்பட்ட காலநிலை பிற்பகல் 3 மணியளவில் 5 மீற்றர் உயரத்திற்கு பனிமூட்டம் நிறைந்து காணப்பட்டது, மழையும் ஆரம்பித்தது.
அவ்வாறெனில் காலநிலை தொடர்பான அறிக்கை எவ்வாறு அனுமதிக்கப்பட்டது? கூடவே சென்ற ஏனைய 2 ஹெலிகொப்டர்களும் எங்கே சென்றது? அதில் பயணித்த பாதுகாப்பு தரப்பு மற்றும் மருத்துவ உதவியாளர்கள் என்ன ஆனார்கள்?
நீண்டதூர பயணத்திற்கு பாதுகாப்பான விமானத்தை பயன்படுத்தாமல் ஹெலிகொப்டரை பயன்படுத்தியது ஏன்?
ஹெலிகொப்டர் காணாமல் போய் 4 மணிநேரமாகியும் பாதுகாப்பு தரப்பு உடனடியாக செயல்படாதது ஏன்?
உலகமே அச்சப்படும் அளவிற்கு நவீன ஆயுதங்கள், விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் கொண்ட ஈரான், தேடுதல் பணிக்கு இரவு வெளிச்சம் கொண்ட ஹெலிகொப்டர்கள், மீட்பு பணியாளர்களை துருக்கியிடம் கோரியது ஏன்?
ஈரான் அதிபர் அஸர்பைஜான் செல்ல முன்னர் அமெரிக்க விமானம் ஒன்று அஸர்பைஜான் வந்து சென்றதாக போட்டோவுடன் பரவும் செய்திகளின் உண்மை என்ன?
போன்ற கேள்விகள் நமது அறிவுக்கு புலப்பட்டாலும் “இறைவனின் நாட்டம்” நடந்து விட்டது என்பதுதான் நமது நம்பிக்கை மற்றும் நிம்மதியான முடிவு.
எது எப்படியோ இன்றுவரைக்கும் துருக்கி ஊடாக இஸ்ரேலுக்கான எரிவாயுவை (குழாய் மூலம்) வழங்கும் ஒரே நாடு அஸர்பைஜான் என்பது குறிப்பிடத்தக்கது.