பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள்,சுயேச்சைக் குழுக்களால் 690 வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு.-- தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்ந்து 690 வேட்புமனுக்கள் சமர்ப்பிக் கப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக் குழு அறிவித்துள்ளது.
இதனிடையே, வடக்கு மாகாணத்தில் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்ந்து 91 வேட்பு மனுக்களும் கிழக்கு மாகாணத்தில் கட்சிகள், சுயேச்சை குழுக்கள் சார்ந்து 144 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் காலம் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து வேட்புமனு தொடர்பான செய்தியாளர் சந்திப்பை தேர்தல்கள் திணைக்களத்தில் ஆணையாளர் சமன் சிறீ ரத்நாயக்க நேற்று நடத்தியிருந்தார்.
அதில், அவர் தெரிவித்தவை வருமாறு,
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடு முழுவதுமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களிலும் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் சார்ந்து 764 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இவற்றில் 74 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான அரசியல் குழுக்கள் போட்டியிடுகின்றன.
இங்கு, 72 கட்சிகள், சுயேச்சை குழுக்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.
இவற்றில் 8 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதனால், 64 கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
இதேநேரம், மொனராகலை, பொலநறுவை மாவட்டங்களில் குறைந்தளவிலான கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன.
அங்கு தலா 15 கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன - என்றார்.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் கட்சிகள், சுயேச்சை குழுக்கள் சார்ந்து 91 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 44 கட்சிகள் மற்றும் சுயேச்சைகளும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் 47 கட்சிகள் மற்றும் சுயேச்சைகளும் போட்டியிடுகின்றன.
இந்த மாகாணத்தில் 12 ஆசனங்களை கைப்பற்றுவதற்காக 819 போட்டியிடுகின்றனர்.
இதேபோன்று, கிழக்கு மாகாணத்தில் கட்சிகள், சுயேச்சைகள் சார்ந்து 144 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலையில் 31 கட்சிகள், சுயேச்சைகளும் மட்டக்களப்பில் 49 கட்சிகள், சுயேச்சைகளும் திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் 64 கட்சிகள், சுயேச்சைகளும் போட்டியிடு கின்றன.
இந்த மாகாணத்தில் 16 ஆசனங்களைப் பெறுவதற்காக 1,249 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
திருகோணமலையில் 4 ஆசனங்களுக்காக 217 பேரும் மட்டக்களப்பில் 5 ஆசனங்களுக்காக 392 பேரும் திகாமடுல்லவில் 7 ஆசனங்களுக்காக 640 பேர் களமிறங்கியுள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.