அடிப்படை வசதிகள் இன்றி வடமாகாண மட்ட சிங்கள போட்டி நிகழ்வுகள் நடத்தப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி வடமாகாண மட்ட சிங்கள போட்டி நிகழ்வுகள் நடத்தப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டி நிகழ்வுகள் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கோட்டக்கல்வி அலுவலக கட்டடத் தொகுதியில் நடைபெற்றன.
எந்த விதமான அடிப்படை ஏற்பாடுகளும் இன்றி வடமாகாண கல்வித் திணைக்களத்தால் இந்தப் போட்டி நிகழ்வுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக நடுவர் குழு உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் பல்வேறு பாடசாலைகளில் இருந்து மாணவர்களை அழைத்து வந்த பொறுப்பாசிரியர்களை நடுவர்களாக நியமித்தமை தொடர்பில் பல்வேறுபட்ட ஆட்சேபனைகளை வெளியிட்ட பெண் ஆசிரியை ஒருவரை கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் பாணியில் செயல்பட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இவ்வாறான பல சர்ச்சைகள், குழப்பங்களுக்கு மத்தியில் இந்தப் போட்டி நிகழ்வுகள் நிறைவு பெற்றிருந்தன.
ஒரு மாகாண மட்ட போட்டி நிகழ்த்தப்படுவதாயின், ஏற்கனவே உரிய முறையில் அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டு திட்டமிட்டிருத்தல் வேண்டும்.
ஆனால், எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாமல் இந்தப் போட்டி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
குறிப்பாக, காலை 8.30 மணிக்கு கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்துக்கு மாணவர்களும் பொறுப்பாசிரியர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தின் தூரப் பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் இந்தப் போட்டி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டிய தேவை இருந்த போதிலும் இலகுவில் அடையக்கூடிய ஓரிடத்தில் இந்தப் போட்டி நிகழ்வுகள் நடத்தப்படவில்லை.
ஐந்து மாவட்ட மாணவர்களும் இலகுவில் செல்லக்கூடிய ஒரு மத்திய நிலையத்தில் இந்த போட்டிகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
இவ்வாறான ஒழுங்குபடுத்தல்கள் பெரும் அசௌகரியங்களை மாணவர்களுக்கும் பொறுப்பாசிரியர்களுக்கும் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது.
இப்போட்டிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த வளாகமானது துப்புரவு செய்யப்படாது குப்பைகள் நிறைந்து பாதுகாப்பற்ற ஒரு பகுதியாகவே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்தப் பகுதியில் மாணவர்கள் தங்குவதற்கு எந்த விதமான இட வசதிகளும், ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படவில்லை.
அத்தோடு, அவ்விடங்களில் அமர்வதற்கு கதிரைகள் இடப்படாதிருந்ததையும் பொறுப்பாசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டினர்.
அங்கே காணப்பட்ட ஒரு கொட்டகை பாதுகாப்பற்ற நிலையில் கூரை விழும் அபாயத்தில் இருந்ததாகவும் இந்த கூரை விழுந்தால் பல மாணவர்களுக்கு உயிராபத்து கூட ஏற்படலாம் என்றும் பெற்றோர்கள். ஆசிரியர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த வளாகத்தில் குடிநீர் வசதி எதுவும் மாணவர்களுக்காக செய்து கொடுக்கப்பட்டவில்லை.
200இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பற்றிய இந்தப் போட்டி நிகழ்வில் குடிநீர் வசதிகூட செய்து கொடுக்கப்படாமை மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.