மருத்துவர் த.சத்தியமூர்த்தி மீது எம்.பி மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனின் விடயங்கள் உண்மை.-- சட்டத்தரணி எஸ்.கனகசிங்கம் நீதிமன்றில் தெரிவிப்பு.

1 week ago



யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் கூறிய விடயங்கள் உண்மையே என அர்ச்சுனாவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எஸ்.கனகசிங்கம் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மருத்துவர் சத்தியமூர்த்திக்கு எதிராக அவதூறான கருத்துகளைப் பரப்புவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டாணையை நீதிமன்றம் நீடித்துள்ளது.

வழக்காளியான மருத்துவர் சத்தியமூர்த்தி, இறுதி யுத்தம் முடிவடைந்த நிலையில் தடுப்புக் காவலில் இருந்த போது அங்கு அவருக்கு நிகழ்ந்த துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனாவால் சொல்லப்பட்ட கருத்துகள், கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குள் நுழைந்து தவறான வார்த்தைப் பிரயோகங்களால் வாக்குவாதப்பட்டமை உள்ளிட்டவற்றுக்காக 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி மருத்துவர் சத்தியமூர்த்தியால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, எதிராளியான நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் கூறிய விடயங்கள் அனைத்தும் உண்மை எனவும், அவற்றை மன்றில் நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டுள்ளது.

இதேவேளை - யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்திக்கு எதிராக, அவதூறான கருத்துகள் தெரிவிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டாணையும் நீடிக்கப்பட்டுள்ளது.

வழக்காளியான மருத்துவர் சத்தியமூர்த்தியின் சார்பில், சட்டத்தரணி குருபரன் வழக்கில் முன்னிலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.





அண்மைய பதிவுகள்