பங்களாதேஷில் திட்டமிட்டு இந்துக்களின்மீது தாக்குதல் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் கவலை.

5 months ago


பங்களாதேஷில் நன்கு திட்டமிட்டு மதத் சிறுபான்மையினர் - குறிப்பாக இந்துக்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது கவலையளிக்கின்றது என்று அந்த நாட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பங்களாதேஷில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இடம்பெற்ற மாணவர் போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இந்துக்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினருக்கு எதிராக பல்வேறு இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. பொலிஸ் நிலையங்கள். அரசு கட்டடங்கள், ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்களின் வீடுகள், கோவில்கள் உள்ளிட்ட கட்டடங்கள் மீதும் போராட்டக்காரர்கள் தாக்கு தல் நடத்தினர். பல கட்டடங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இந்துக்கள், தாங்கள் எதிர் கொள்ளும் தாக்குதல்கள் குறித்து வெளியிட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

பங்களாதேஷில் நிலைமை மிகவும் பதற்றமாக இருப்பதாகவும். இந்துக்கள் வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் அங்குள்ள இஸ்கான் கோவில் துறவி ஒருவர் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். பிரபல இந்து இசைக் கலைஞர் ராகுல் ஆனந்தாவின் வீடும் எரிக்கப்பட்டது.

பங்களாதேஷில் உள்ள சிறு பான்மையினரின் நிலை (பெரும்பாலும் இந்துக்கள்) குறித்து நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய இந்திய வெளி விவகார அமைச்சர் எஸ். ஜெய் சங்கர் தெரிவித்தார்.

இந்த நிலையில், மதச் சிறு பான்மையினர் மீது தாக்குதல்கள் நடப்பதாக வெளியாகும் செய்திகள் மிகவும் கவலையளிப்பதாக அந்த நாட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத் தளப்பதிவில், "மதச் சிறுபான்மையினர் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளதாக வெளியாகும் செய்திகள் மிகவும் கவலை யளிக்கின்றன.

சிறுபான்மையினரைப் பாதுகாக்க மாணவர் இயக்கம் மற்றும் பிறரின் முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம். அனைத்துத் தரப்பினரும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். வகுப்புவாத வன்முறையை நிராகரிக்க வேண்டும். பங்களா தேஷ் மக்கள் அனைவரின் மனித உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். மிகவும் அவசரமாக இந்த வேண்டுகோளை நாங்கள் முன்வைக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.