கடுமையான வெப்பம் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட சுமார் 550 பேர் உயிரிழந்தனர் என சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் எகிப்து, ஜோர்தான், இந்தோனேசியா, ஈரான், செனகல் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இஸ்லாமிய மக்கள் தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் சவூதி அரேபியாவின் மெக்கா, மதினாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டு சவூதியில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக இந்த யாத்திரையின் போது சுமார் 550 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில் 323 பேர் எகிப்து மற்றும் 60 ஜோர்தான் நாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடல்கள் மெக்காவுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
காலநிலை மாற்றத்தால் ஆண்டுக்கு 0.4 பாகை செல்சியஸ் என்ற அளவில் மெக்காவில் சடங்குகள் மேற்கொள்ளப்படும் முக்கிய இடத்தில் வெப்பம் அதிகரித்து வருவதாக கடந்த மாதம் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை அன்று மெக்காவில் உள்ள அல் ஹராம் மசூதியில் சுமார் 51 பாகை செல்சியஸ் வெப்பம் நிலவியதாக சவுதி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் புனித யாத்திரையின் போது காணாமல்போன எகிப்து மக்களை சவூதி அதிகாரிகளின் உதவியுடன் தேடி வருகின்றனர் எகிப்து நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், யாத்திரையின் போது உயிரிழப்பு ஏற்பட்டதையும் அமைச்சகம் உறுதி செய்தது. ஆனால், உயிரிழந்த எகிப்து மக்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை.
யாத்திரையின் போது வெப்பத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளித்து வருவதாக சவூதி அரசு தெரிவித்தது.
இருந்தாலும் கடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை புதுப்பிக்காமல் உள்ளது.
நடப்பு ஆண்டில் சுமார் 18 இலட்சம் பேர் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் 16 இலட்சம் பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.