யாழ்.வேலணையில் பெண் ஒருவரைக் கூட்டுவன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்துக்காக குற்றவாளிக்கு சிறை

1 month ago



யாழ்.வேலணையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குடும்பப் பெண்ணொருவரைக் கூட்டுவன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்துக்காக பிரதான குற்றவாளிக்கு 118 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த நிலையில், வழக்கின் முதலாம் எதிராளிக்கு எதிரான தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி குடும்பப் பெண்ணை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியமைக்காக, 100 மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனையும், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தமைக்காக 12 மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனையும், பெண்ணின் கணவனைத் தாக்கிக் காயம் ஏற்படுத்தியமைக்காக 6 மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் என 118 மாத கடூழிய சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.

அத்துடன் பெண்ணுக்கு இழப்பீடாக 2 லட்சம் ரூபா வழங்கவேண்டும் என்றும், அதை வழங்கத் தவறினால் 20 மாத சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிவரும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் குற்றப் பணமாக 50 ஆயிரம் ரூபாவைச் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கின் இரண்டாம் எதிராளி மீதான குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டு, அவருக்கான தண்டனை கடந்த மாதம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆப்பு

அண்மைய பதிவுகள்