அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொல்ல திட்டமிட்ட பர்ஹாத் ஷகேரி இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களையும் கொல்ல திட்டம்

2 months ago



அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்பை கொல்ல திட்டமிட்ட பர்ஹாத் ஷகேரி என்ற நபர், இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களையும் கொல்ல திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை இன்று (09) அறிவித்துள்ளது.

49 வயதான கார்லிஸ்ல் ரிவேரா என்ற நபர் நியூயோர்க்கின் புரூக்ளினிலும், 36 வயதான ஜொனத் லோடோல்ட் நியூயோர்க்கின் ஸ்டேட்டன் தீவில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இந்த இருவராலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்டுள்ள 51 வயதான ஈரானிய பர்ஹாத் ஷகேரி இன்னும் கைது செய்யப்படவில்லை.

மேலும் அவர் தற்போது ஈரானில் தங்கியிருப்பதாக அமெரிக்கா நம்புகிறது.

எனினும் அவர்கள் மூவருக்கும் எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைவார் என்றும், அவரைத் தேர்தலுக்குப் பின் சுட்டுக் கொல்ல சந்தேகநபர்கள் திட்டமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில், ஈரானின் புரட்சிகர காவலர் படையைச் சேர்ந்த ஒரு அதிகாரி, ட்ரம்பை கண்காணிக்கவும், அவரை படுகொலை செய்வதற்கான திட்டத்தை தயாரிக்கவும் செப்டம்பர் மாதம் ஷகேரிக்கு உத்தரவிட்டதாக சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நியூயோர்க்கில் வசிக்கும் இரண்டு யூத அமெரிக்கர்களை குறிவைக்க ஷகேரிக்கு அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாகவும், ஈரானிய புரட்சிகர காவல்படை அவர்கள் ஒவ்வொருவருக்கும் 500,000 அமெரிக்க டொலர் வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருகை தரும் இஸ்ரேலியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பணியும் ஷகெரிக்கு வழங்கப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவயதில் அகதியாக அமெரிக்கா வந்த ஷகேரி, திருட்டு வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து 2008இல் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.

அமெரிக்க நீதித்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பை மேற்கோள் காட்டி, பிபிசி, அல்ஜசீரா மற்றும் உலகின் முன்னணி செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியை கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்தியாவின் NDTV வௌியிட்ட செய்தியில், 2019 ஆம் ஆண்டில், ட்ரம்பை கொல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஷகேரி என்ற ஈரானியர் இலங்கையில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஹெராயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக NDTV தெரிவித்துள்ளது.

51 வயதான அவர், ஈரானிய அரசாங்கம் குறி வைத்திருந்த இலக்குகளை கண்காணிப்பதற்காக சிறையில் இருந்த ரிவேரா மற்றும் லோடோல்ட் போன்றவர்களை பயன்படுத்தி உள்ளார்.

அவர்கள் "குற்றவாளிகளின் வலையமைப்பாக" கருதப்படுகின்றனர்.

எனினும், ட்ரம்ப் படுகொலை சதியின் பின்னணியில் ஈரான் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஈரான் இதுவரை பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.