சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட படகு ஐந்து மாதங்களின் பின்னர் நாட்டை வந்தடைந்தது
மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச்செல்லப்பட்ட "லொரென்சோ புத்தா 04" இழுவைப் படகு சுமார் ஐந்து மாதங்களின் பின்னர் நாட்டை வந்தடைந்துள்ளது.
குறித்த படகு ஆறு மீனவர்களுடன் நேற்று முன்தினம் பிற்பகல் திக்கோவிட்ட துறைமுகத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிலாபம் - திக்கோவிட்ட மீன்பிடி துரைமுகத்தில் இருந்து தமது பயணத்தை ஆரம்பித்த "லொரென்சோ புத்தா 04" மீன் பிடி இழுவைப் படகு ஆறு மீனவர்களுடன் சோமாலிய கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி உறுதிப்படுத்தியது.
புத்தா இதன்படி,"லொரென்சோ புத்தா 04" சோமாலியாவின் மொகடி/ கடற்கரையில் இருந்து 500 கடல் மைல் தொலைவில் கடற்கொள்ளையர்கள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து படகை மீட்பதற்கு இலங்கை கடற்படை, இந்திய கடற்படை மற்றும் சீஷெல்ஸ் கடற்படை ஆகியவை இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன.
இதன்படி, இலங்கை மற்றும் சீஷெல்ஸ் அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தின் பின்னர் கடந்த 29 ஆம் திகதி சீஷெல்ஸ் கடலோர காவல்படையினால் படகு கைப்பற்றப்பட்டது.
அத்துடன், படகு சீஷெல்ஸ் தளத்தில் நங்கூரமிடப்பட்டதுடன், மூன்று சோமாலிய கொள்ளையர்களும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.