யாழ்.பருத்தித்துறையில் கடற்றொழில் அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் களஞ்சியசாலைக்கு பூட்டுப் போட்டதால் பரபரப்பு

1 month ago



யாழ்.பருத்தித்துறையில் கடற்றொழில் அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் களஞ்சியசாலைக்கு பூட்டுப் போட்டதால் பரபரப்பு.

இலங்கை கடற்றொழில் நீரியல் வள அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தனி நபர் ஒருவர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் களஞ்சியசாலை ஒன்றைத் தான் கொண்டு வந்த பூட்டு ஒன்றினால் பூட்டித் திறப்பை எடுத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தின் தலையீட்டை அடுத்து, அந்தப் பூட்டு மீளப் பெறப்பட்டு நிலைமை சுமுகமானது.

இந்தச் சம்பவம் பருத்தித்துறை, முதலாம் குறுக்குத் தெரு பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.

பருத்தித்துறை முதலாம் குறுக்குத் தெருப் பகுதியில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள களஞ்சியசாலை ஒன்றுக்கு வந்த நபர் ஒருவர், அங்கிருந்தபடி களஞ்சியசாலையின் காப்பாளருக்குத் தொலைபேசியில் அழைப்பு எடுத்தார்.

தன்னைக் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் என்று அறிமுகப்படுத்திய பின் அடாவடியில் அவர் ஈடுபட்டதுடன். எவ்வித நடைமுறைகளையும் பின்பற்றாமல் தான் எடுத்துக் கொண்டு வந்த பூட்டைக் களஞ்சியசாலையில் பூட்டிய பின்னர் அதன் திறப்புகளைத் தன்னுடன் எடுத்துச் சென்றார்.

அதன் பின்னர், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ். குருநகர் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது குறித்த நபரைக் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சரின் ஒரிங்கிணைப்பாளர் என்று அறிமுகப்படுத்திய போது, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை களஞ்சியசாலைக்குப் பூட்டுப் போட்ட நபர் இவர் தான் என்பதனைக்    கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள் அடையாளம் கண்டுகொண்டனர்.

இதற்கிடையில், பருத்தித்துறையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளரால் ஜனாதிபதி    செயலகத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாடு கிடைத்து ஒரு மணி நேரத்தினுள் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சருக்கும், சம்பந்தப்பட்ட நபருக்கும் அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து வேறு நபர்கள் களஞ்சியசாலைக்கு அனுப்பப்பட்டு, சட்டவிரோதமாகப் பூட்டப்பட்ட பூட்டு மீளப்பெறப்பட்டது.

அதன் பின் நிலைமை சுமுகமானது.