இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் காஸா முனையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 14 மாதங்களாக நீடிக்கும் போரில் காஸா முனையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியதாக பலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொல்லப்பட்டவர்களில் பொதுமக்கள் எத்தனை பேர், ஹமாஸ் அமைப்பினர் எத்தனை பேர்? என்று கூறப்படவில்லை.
ஆனால், இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேசமயம், 17, 000இற்கும் மேற்பட்ட ஹமாஸ் போராளிகளை கொன்றதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 45, 028 பேர் கொல்லப்பட்டதாகவும், 106,962 பேர் காயமடைந்ததாகவும் பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இடிபாடுகளுக்கு அடியில் அல்லது மருத்துவ ஊழியர்கள் செல்ல முடியாத பகுதிகளில் ஆயிரக் கணக்கான உடல்கள் இன்னும் புதையுண்டிருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்தாலும், இப்போது இடம்பெறும் போரானது மிகக்கொடியதாக மாறியுள்ளது.
போருக்கு முன்பு காஸாவில் 23 இலட்சம் மக்கள் இருந்த நிலையில், போரில் 2 சதவீதம் பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.