மாற்றம் என்ற கோசத்தோடு புதிதாக வந்துள்ள அனுர அரசின் செயற்பாடுகளில் எவ்வித மாற்றமுமில்லை.-- சிவாஜிலிங்கம் தெரிவிப்பு
ஆட்சி மாறியுள்ளதே தவிர காட்சிகள் மாறவில்லை என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் என ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூறியவர்கள் இன்று பாராளுமன்றம் தீர்மானித்தால் அது தொடர்பில் பார்க்கலாம் என பின்வாங்கியுள்ளனர்.
13 ஆம் திருத்தச் சட்டத்தை கூட நிறைவேற்றப் போவதில்லை என கூறுகின்றனர்.
இனப்படுகொலை செய்த இராணுவத்தை காப்பாற்றும் நோக்கில் வெளிநாட்டு விசாரணை இல்லை என்றும் உள்நாட்டு விசாரணையே நடத்தப்படும் என்று கூறி வருகின்றனர்.
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பேசியவர்கள் இப்போது மௌனமாக உள்ளனர்.
பிரதமர் ஹரிணி ஜே.வி. பியின் இனவாதம் தொடர்பில் ஆராட்சி கட்டுரை எழுதியே கலாநிதிப் பட்டம் பெற்றிருந்தார்.
புதிய மொந்தையில் பழைய கள் என்ற வகையிலேயே இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
போரில் கொல்லப்பட்டவர்களுக்கு இந்த அரசில் நீதி கிடைக்காது.
ஐந்து கட்சிகள் ஒற்றுமையாக போட்டியிடுகிறோம். மக்கள் ஒற்றுமையை விரும்புகின்றனர்.
வடக்கு மீனவர்கள் பிரதிநிதிகளை தமிழ்நாட்டுக்கு அழைத்துச் சென்று பேச்சு நடத்த நடவடிக்கை எடுப்பேன்.
இந்த அரசு தேர்தல் ஆதாயத்திற்காக மீனவர் வாக்குகளை கவர்வதற்கு முயற்சித்தால் மீனவர்களது கடும் கோபத்திற்கு ஆளாகவேண்டி வரும்-என்றார்.