மீன்பிடித்த குற்றச்சாட்டில் யாழில் கைதான 50 இந்திய மீனவர்களை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்த சிறைத் தண்டனையுடன் விடுதலை
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைதான 50 இந்திய மீனவர்களை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்த சிறைத் தண்டனையுடன் யாழ் நீதிவான் நீதிமன்றங்கள் விடுதலை செய்துள்ளன.
அத்துடன், ஐவருக்கு சிறைத் தண்டனையும் விதித்துள்ளன.
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதாகி தடுத்து வைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்குகள் நேற்று வெள்ளிக்கிழமை இரு நீதிமன்றங்களில் நடைபெற்றன.
ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நடந்த வழக்கில் கடந்த மாதம் 4, 7ஆம் திகதிகளில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த 18 இந்திய மீனவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிவான் நளினி சுபாகரன், 13 இந்திய மீனவர்களை நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்தார்.
அத்துடன், படகு ஓட்டுநர்கள் மூவருக்கும் படகின் உரிமையாளர் ஒருவருக்குமாக நால்வருக்கு தலா ஓராண்டு சிறையும் இரண்டாவது முறையாக இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தவருக்கு ஒன்றரை ஆண்டு சிறைத் தண்ட னையும் விதித்தார்.
இதேநேரம், கடந்த செப்ரெம்பர் 21ஆம் திகதி பருத்தித்துறை கடலில் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 37 இந்திய மீனவர்கள் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிவான் பொ. கிரிசாந்தன், 33 மீனவர்களை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்த தலா ஒரு வருட சிறைத் தண்டனை, 3 மீனவர்களை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்த தலா 16 மாத சிறைத் தண்டனை, ஒருவருக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைத்த 20 மாத சிறை தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.