யாழ்.நிலாவரையில் அமைந்த வாழைப்பழம் பதனிடல் நிலையத்தால் பயனில்லை -- விவசாயிகள் கவலை

2 months ago



யாழ்.நிலாவரையில் அமைந்த வாழை பதனிடல் நிலையத்தால் பயனில்லை -- விவசாயிகள் கவலை

யாழ்.வலிகாமம் கிழக்குப் பிரதேசம் வாழை மரமுள்ள பிரதேசம் என்று ஒரு காலம் பேசப்பட்டது. வாழைப் பயிர்ச் செய்கையில் போட்டி போட்டு வாழை செய்தவன் வீடு கட்டினவன் என்று வாழ்வில் பெயரெடுத்தவர்கள் அந்தக் காலத்தில் இருந்தார்கள். 

இன்று அந்த சொற்பதத்தை பயன்படுத்துகிறார்களே ஒழிய வாழைச் செய்கையை மேற்கொள்பவர்கள் தமது அன்றாட வாழ்வை நகர்த்த முடியாமல் கஷ்ரப்படுகிறார்கள்.

இதற்கு விவசாய திணைக்களம் உட்பட தொண்டு நிறுவனங்களும் காரணம் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

உதவி செய்பவர்கள் மீது குற்றச்சாட்டை விவசாயிகள் வைப்பதற்கு பல காரணங்களைக் கூறுகிறார்கள்.

உண்மை நிலவரம் என்ன வென்றால் விவசாயம் சம்பந்தப்பட்ட அரசு, தனியார் அமைப்புகள் விவசாயிகளிடம் கலந்தாலோசித்து ஒரு திட்டத்தை மேற்கொள்வதில்லை என்று சொல்கிறார்கள். 

ஒரு திட்டத்தை தமது வசதிக்கேற்ப நிறுவனங்கள் மேற்கொள்வதால் அந்த திட்டத்தின் பயன் உட்பட தொடர்ந்து செய்ய முடியாமல் போகிறது என்று விவசாயிகள் குறை சொல்கிறார்கள்.

கதலி வாழைப்பழத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி கதலி வாழைச் செய்கையாளரை ஊக்குவிப்பதற்காக யாழ்.வலிகாமம் கிழக்கு நிலாவறையில் ஒரு வாழைக்குலை பதனிடல் தொழிற்சாலை அமைந்துள்ளது.

ஆனால் இந்த நிலையத்தால் இலாபத்தை அடைய முடியவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ASMP நிறுவனத்தால் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தில 95 மில்லியன் ரூபா செலவில் இந்த கதலி வாழைக்குலை பதனிடல் நிலையம் புதிதாக அமைக்கப்பட்டது.

இந்த திட்டத்தில 588 விவசாயிகள் சேர்ந்திருகிறார்கள். அவர்களுக்கு உள்ளீடுகள் வழங்கி கதலி வாழைக்குலை செய்கையை ஊக்குவிப்பதற்காக இந்த நிலையம் திறக்கப்பட்டது.

ஆனால் வாழைக்குலையை பதனிடல் நிலையத்துக்கு கொண்டு வந்து கொடுத்தால் கீழாக மூன்று நாலு சீப்பை வெட்டி கூட கழிக்கிறார்கள்.

இதைவிட கடையில் கொடுத்தால் ஒரு விலை போட்டு குலையை முழுமையாக வாங்குவதால் மேலதிக பணம் வருகிறது என்று விவசாயிகள் சொல்கிறார்கள்.

வாழைக்குலையை மூடிக் கட்டுவதற்கு பொலித்தீனைக் கொண்டு வந்து கொடுத்தினம். அந்தப் பொலித்தீன் பல பேரின் வாழைக்குலையை இல்லாமல் செய்தது.

ஒரு பகுதி பழுத்தும் ஒரு பகுதி பழுக்காமலும் குலையை வெட்டினவை என்று இந்த நிலையத்தின் தலைவர் சொல்கிறார்.

தரமான பொலித்தீன் அவர்களுக்கு கிடைப்பதில்லை. தெற்குப் பிரதேசங்களில வாழைக்குலை பயிர்ச் செய்கையாளர்களுக்கு வழங்கிய பொலித்தீனாலை வாழைக்குலை பழுதடையவில்லை என்பதை நேரில் சென்று பார்த்ததாக அந்த நிலையத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.

இந்த நிறுவனத்தால் வாழைக்குலை செய்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக பொலித்தீன் வந்ததாகவும், ஆனால் அந்தப் பொலித்தீன் 3 கடைகளில் விற்பனைக்கு இருந்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வாழைக்குலை செய்கையை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் குறைந்து வரும் நிலையில் அதனை மேம்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முயற்சி எடுக்காத விடத்து வாழைக்குலை பதனிடல் நிலையத்தின் மூலம் வாழைக்குலையை ஏற்றுமதி செய்து வாழைக்குலை செய்கையாளர்கள் இலாபம் அடைவார்கள் என்பது கனவாகத் தான் முடியும் போல் இருக்கிறது.

சம்பந்தப்பட்டவர்கள் இதில் கவனம் எடுக்கவும்.

யாழ்.இராசபாதை வீதியின் இரு மருங்கிலும் வாழைக்குலை தோட்டங்கள் இருந்தன. இன்று அந்த வீதியூடாகச் சென்றால் கட்டடக் காடாக காட்சியளிக்கின்றன.

விவசாய நிலங்களில் கட்டடங்களை கட்டுவதற்கு அனுமதியை வழங்கியுள்ளார்கள். 

விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று பல மில்லியன் ரூபாவை அரசு ஒவ்வொரு ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்குகிறது. அந்த நிதி எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. விவசாயத்துக்கு பயன்படுத்தினால் இன்று விவசாய உற்பத்தியில் நாடு முன்னேற்றம் கண்டிருக்கும்.

ஆரம்ப காலங்களில் விவசாயம் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் குறைவாக இருந்தன ஆனால் விவசாய உற்பத்தி பெரு வளர்ச்சி கண்டிருந்தன.

இன்று விவசாயத்துக்கு என பல நிறுவனங்கள் இருந்தும் விவசாயத்தை கட்டியெழுப்ப முடியவில்லை என்பது கவலை தரும் விடயமாகும்.

நாடு ஊழல் நிறைந்ததாக காணப்படுகிறது என்று அரசே தெரிவிக்கும் நிலையில், விவசாய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தாங்களாக நினைத்தால் மட்டுமே இதனை ஒழிக்க முடியும். இல்லாது போனால் தம்புள்ளையில் இருந்து விவசாய உற்பத்திப் பொருள்களை இறக்குமதி செய்யும் காலம் வரும்.

விவசாயி பயனடையாமல் இடைத் தரகர் தொடக்கம் உற்பத்திப் பொருள்களை கொள்வனவு செய்பவர்கள் விற்பவர்கள் வரை பயனடைந்து பலனில்லை. 

அண்மைய பதிவுகள்